எது கல்வி? ஏன் கல்வி?

-ஞானி

கல்வி எல்லோருக்கும் தேவை என்பதில் நம்மிடையில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கல்வி என்றால் என்ன? எந்த அளவுக்கு கல்வி தேவை? கல்வி என்பது இளமையிலேயே முடிந்து போகிறதா? இப்படி எல்லாம் கேள்விகள் எழும்பொழுது நமக்கிடையில் மாற்றுக் கருத்துகள் எழுவதில் வியப்பில்லை. இத்தகைய கேள்விகளை முன் வைத்து இந்த க் கட்டுரையைத் தொடங்கலாம்.

கல்வி என்பது மனிதனாக தன்னை உணரும் எவருக்கும் இன்றியமையாதது. விலங்குகளைப் பொறுத்த வரை அவற்றின் வாழ்நிலைக்கு ஒத்த நிலையில் சில பழக்கங்கள் இயல்பாகவே வந்து சேருகின்றன. இவை நமக்கு வியப்பு தருகிறது. தூக்கணாங்குருவி அழகான சிக்கலான கூடு அமைக்கிறது. எறும்புகளும், தேனீக்களும் தம் மத்தியில் ஓர் ஒழுங்கான சமூக அமைப்பைக் கொண்டுள்ளன. இப்படி உயிரினங்கள் மத்தியில் எத்தனையோ விந்தைகள் உள்ளன. ஆனால் மனிதனைப் பொறுத்தவரை இயல்பாகவே தம் இனத்திற்கென அமையும் பழக்கங்கள் போதுமானவை அல்ல. மனிதன் தான் ஒரு சிக்கலான சமூக அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறான். மனிதன் சமூகத்தில் மட்டுமல்லாமல் வரலாற்றில் வாழ்கிறான். கலாச்சாரம் என்ற கட்டமைப்போடு தான் இணைந்திருக்கிறான். மனிதன் தன் காலம் முதலியவற்றை வகுத்துக் கொண்டு வாழ்கிறான். தேசங்கள் முதலிய எல்லைகளை இவன் வகுத்துக் கொண்டவை.

எந்த உயிரினத்திற்கும் தன்னுணர்வு என்பது இல்லை. மனிதனுக்கு மட்டுமே தான் மனிதன் என்ற தன்னுணர்வு உண்டு. இவந்தான் வாழுகிற இயற்கை முதற்கொண்டு பிரபஞ்சத்தையும் தன் அறிவுக்கும், ஆளுகைக்கும் உட்படுத்த முனைகிறான். இவனுக்குத் தான் நூற்றுக் கணக்கில் கருவிகள் உண்டு. வாகனங்கள் உண்டு. தர்க்கங்கள் உண்டு. கலை இலக்கியங்கள் உண்டு. சமயங்கள் உண்டு. சாதிகளும், மதங்களும் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது போல இவன் இப்பொழுது வாழ்வதில்லை. இவனுக்குத்தான் இறந்த காலம் என்பதைப் போலவே எதிர்காலம் உண்டு. இவனுக்குத்தான் உள்ளுணர்வு உண்டு. இப்படி பிற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு எத்தனையோ புதுமைகளை இவன் படைத்து வைத்திருக்கிறான்.

இப்பொழுது நாம் சொல்லும் கல்வி என்பதற்கு ஏதாவது வரையரை இருக்க முடியுமா? இளவயதில் பள்ளியில் சேருகிற பொழுது எண்களையும் நம் மொழிக்குரிய எழுத்துகளையும் கற்கிறோம். இப்பொழுது தான் கல்வி என்பது தொடங்குகிறதா? இல்லை. தாயின் கருவில் இருக்கும் பொழுதே கல்வி தொடங்கி விடுகிறது என்று அறிஞர்கள் சொல்கின்றனர். குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்கிறது. தாய் மட்டுமா கற்றுக் கொடுக்கிறாள். எல்லாரும் கற்றுத் தருகின்றனர். குழந்தை தவழும் பொழுது அதையும் இதையும் தொட்டு கைகளால் பற்றி பிடித்து இழுத்து போட்டு உடைத்துக் கற்றுக் கொள்கிறது. குழந்தை வளர்கிறது. நாயும், பூனையும், குருவியும் கற்றுத் தருகின்றன. விளையாட்டின்போது குழந்தை கற்றுக் கொள்கிறது. அங்கும் இங்கும் ஓடிக் கற்றுக் கொள்கிறது. ஒவ்வொரு சொல்லாக ஒவ்வொரு ஓசையாகக் கற்றுக் கொள்கிறது. மரம், செடி, கொடிகள், வானம், பூமி, சூரியன், நிலா, நட்சத்திரங்கள், மழை, வெயில் இப்படிக் கற்றுக் கொள்வதற்கு அளவில்லை, எல்லையில்லை. பெற்றோர் கற்பிக்கின்றனர். ஆசிரியர் கற்பிக்கின்றனர். ஊரும் உலகமும் கற்பிக்கின்றன. பள்ளியில் கல்வி முடிவடைகிறதா? மேலும் மேலும் கல்வி தொடர்கிறது. தமிழ் என்றும் ஆங்கிலம் என்றும் வரலாறு என்றூம் புவியியல் என்றும் அறிவியல் என்றும் கல்வி தொடர்கிறது.

இவையெல்லாம் தொடக்கம் மட்டுமே கல்விக்கு எல்லையில்லை. ஆயுட்காலம் முழுவதும் கற்றுக் கொள்கிறோம். தேடித்தேடிக் கற்றுக் கொள்கிறோம். ஓயாமல் நமக்குள் கேள்விகள் எழுகின்றன. தர்க்கங்கள், விவாதங்கள் தொடர்கின்றன. நூல் நிலையங்களுக்குள் நுழைகிறோம் ஆயிரக்கணக்கான நூல்கள் எந்தப் புள்ளியிலும் ஓய்ந்து நிற்க முடியாது. கேள்விகள் நமக்குள் குடைகின்றன. பல திசைகளில் தேடுகிறோம் என்றாவது கல்விக்கு முற்றுப்புள்ளி என ஒன்று உண்டா? இல்லை என்பதே பட்டறிவில் அறிகிறோம். புத்தர், இயேசு, சேக்ஸ்பியர், டால்ஸ்டாய், நியூட்டன், ஐன்ஸ்டீன், மார்க்கஸ், லெனின், பெரியார், அம்பேத்கார் இப்படித் தொடர்கிறோம்.

நாம் மனிதராக, இந்த நாட்டில் இந்த வரலாற்றுச் சூழலில், இந்த அறிவியல் தொழில் நுட்பங்களுக்கு மத்தியில் இந்த நாட்டின் அரசியலோடு, பொருளியலோடு, இந்த மக்கள் மத்தியில் விவசாயிகளோடு, நெசவாளிகளோடு இந்த நிலத்தில் காவிரியோடு, கங்கையொடு அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு மத்தியில் சந்தைப் பொருளாதாரச் சூழலில் தமிழுக்கு மரியாதை இல்லாத தேசத்தில் இந்து மதம் இசுலாமியம் இவற்றுக்கிடையிலான மோதலுக்கிடையில், இங்கிருக்கிர இயற்கை நாசமாவதைப் பார்த்துக் கொண்டு, ஆறுகள் வறண்டு போவதைப் பார்த்துக் கொண்டு, வானவெளியில் ஓசோன் மண்டலம் இளைப்பதைப் பார்த்துக் கொண்டு, கடல் கொந்தளிப்பதைப் பார்த்துக் கொண்டு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கைக்குள் இவை எல்லாமே வந்து மோதிகின்றன. நமக்குள் நாம் என்ன ஆகிறோம் கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறதா? தலைவர்கள் காப்பாற்றுவார்களா? நம்மை என்னவாக ஆக்கிக் கொள்ளப் போகிறோம்? நாம் எப்படி அன்னியருக்கு ஆட்பட்டோம்? கூலிகளானோம். என்னவெல்லாம் இங்கு நடைபெறுகின்றன? நம்மை எப்படிக் காத்துக் கொள்ளப் போகிறோம்? நாம் மனிதர்கள் தானா? நமக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடு உண்டா? இல்லையா? நம் குழந்தைகள் என்ன ஆகிறார்கள்? இவர்களுக்கு என்ன எதிர்காலம்? நம் மக்கள் மத்தியில் சமத்துவம் உண்டா?

கொள்ளைக்காரர்களுக்கு நாம் எப்படி இடம் கொடுத்தோம்? இவர்களுக்கு எப்படி நம்மை இழந்தோம்? நொய்யல் நமக்கு வேண்டாமா? காவிரி நமக்கு இல்லை? கங்கை நமக்கு வந்து சேருமா? அணுமின்சாரம் தேவைதானா? கூடாங்குளம் தேவைதானா? சுனாமி எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது? நமக்கு நோய்நொடிகள் எப்படி வருகின்றன? நமக்கான மருத்துவம் என்ன? நமக்கு எவ்வகையான வாகனங்கள் தேவை? எல்லோரும் உழைக்க வேண்டும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தவறா? ஏற்றத் தாழ்வுகள் தேவைதானா? அமெரிக்கா இல்லாமல் உலகம் வாழமுடியாதா? உலகம் இன்னும் எத்தனை காலத்திற்கு சூரியனைச் சுற்றி வரும்? சூரியனும் இருண்டு போகிற காலமென ஒன்று எப்பொழுது வரும்? வரலாற்றில் நாம் என்னவாக வாழ்கிறோம்? சாதியில்லாமல் முடியாதா? மதங்கள் தேவைதானா?

இவ்வகைக் கேள்விகளோடு நாம் என்னவெல்லாம் கற்றுக் கொள்கிறோமோ இதற்குப் பெயர் தான் கல்வி. இளவயதில் எண்ணும் எழுத்தும் கற்றுக் கொள்வது என்பது இந்த நெடும் பயணத்தைத் தொடங்குவதற்காகத்தான், தொடர்வதற்காகத்தான். இந்தப் பயணம் சரியாகத் தொடங்க வேண்டும். இதற்கு நல்ல ஆசிரியர்கள் தேவை,. நல்ல பள்ளிச் சூழல் தேவை. நல்ல நிர்வாகம் தேவை. இத்தகைய வாய்ப்புகளையும், வசதிகளையும் நம் குழந்தைகளுக்கு அரசு தர வேண்டும். இப்படித் தருகிற அரசு தான் நல்ல அரசு நமக்குத் தேவையான அரசு, இந்தச் சமுதாயம்தான் நல்ல சமுதாயம், ஆரோக்கியமான சமுதாயம் இத்தகைய அரசையும், நல்ல சமூகத்தையும் படைப்பதற்காகத்தான் தரமான கல்வி தேவை. இத்தகைய கல்வியைத் தரக்கூடியவை தாய்த்தமிழ்ப் பள்ளிகள். இந்தப் பள்ளிகள்தான் நம்மைத் தாயாய் வளர்க்கும். தமிழ்தான் நமக்குத்தாய்.

தாய்த்தமிழில் கற்போம்.
தாய்த் தமிழ்ப் பள்ளியில் கற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக