உருவாகட்டும் உணர்வுப்பொங்கல்

-புலவர் செந்தலை .கவுதமன்

அடுத்த பொங்கல் எப்போது வரும் என்று எவரைக் கேட்டாலும் பதில் கிடைக்கும். தை முதல்நாள் என எல்லோரும் எளிதில் சொல்லி விடுவார்கள். பொங்கல் எப்போது என்று அறிய, புரோகிதரையோ பஞ்சாங்கத்தையோ தேடிச் செல்ல வேண்டிய தேவை இல்லை. மற்ற பண்டிகைகளுக்கு அந்த அவலநிலை உண்டு.

அறிவுக்குப் பொருந்திய விழா பொங்கல் விழா என்பதற்கு இந்த ஓர் அடையாளம் போதும்.

பழைமைச் சுமைகளையும் வேண்டாத அழுக்குக் குவியலையும் - உதறி எறியாத எந்தச் சமுதாயமும் புதுமை வெளிச்சத்தில் ஆரோக்கியமாக உலவமுடியாது. இந்த உண்மையை எடுத்துச் சொல்வதே பொங்கலுக்கு முதல்நாள் வரும் போகிப்பண்டிகை.

வேண்டாதவற்றைப் போக்கிக்கொள் !
வேண்டியவற்றைப் புதுப்பித்துக்கொள் ! - என்று நமக்கு எடுத்துச் சொல்வதே போகி ! வேண்டாதவற்றை வீட்டிலிருந்து போக்குவதால் போ(க்)கிப் பண்டிகை எனப் பாராட்டப்படுகிறது.

மார்கழியின் உச்சியில்
வருக. தைப் பொங்கல் நாள் ! - எனப் பொங்கலைப் புதுமையாக வரவேற்பார் பாவேந்தர் பாரதிதாசன்.

தமிழர் ஆண்டான திருவள்ளுவர் ஆண்டு பொங்கல் நாளில்தான் தொடங்குகிறது. பிரபவ, விபவ.. சித்ரபானு என அறுபதுக்குள்ளேயே திரும்பத் திரும்பச் செக்குமாடாய்ச் சுற்றி வருவது வடமொழி ஆண்டு. தமிழர் வீட்டுத் திருமண அழைப்பிதழ்களில் இந்த ஆண்டைத்தான் கவனமாக இடம்பெற வைப்பார்கள்.

தமிழரின் அடையாளத்தைப் பாதுகாக்க விரும்பும் எவரும், திருவள்ளுவர் ஆண்டைத்தான் நடைமுறைப் படுத்துவார்கள். ஆங்கில ஆண்டோடு 31ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும். இயேசு நாதரை விட முப்பத்தோரு ஆண்டுகள் மூத்தவர் திருவள்ளுவர். இந்தப் பொங்கலில் தொடங்குவது 2041.

தமிழருக்கான ஆண்டு - திருவள்ளுவர் ஆண்டு !
தமிழரின் நூல் - திருக்குறள் !
தமிழர் திருவிழா - பொங்கல் விழா !

தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து வழங்குவது பொங்கல் நாள் ! நாம் வாழும் பூமிப்பந்து, சூரியனில் இருந்து பிய்ந்து வந்த சிறுபகுதி ! சூரியனை மையமாக்கித் தான், மனித வாழ்வின் எல்லா இயக்கமும் சுழன்று வருகிறது. இவற்றை நினைவு கூர்வதற்குத்தான், பொங்கல் நாளில் சூரியனுக்கு முன்பாகப் பொங்கல் வைக்கிறோம்.

பொங்கலுக்கு மறுநாள் வருவது மாட்டுப்பொங்கல் ! நன்றியுணர்வையும் தன்னல மறுப்பையும் சமுதாயத்தில் எழுப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டது அந்த விழா! மனிதர்கள் ஒதுக்கித் தள்ளியவற்றை உணவாக்கிக் கொள்கிறது மாடு ! ஆனால் அனைவருக்கும் உணவாகும் பாலை வழங்குகிறது. தேவைப் படாதவற்றை தனக்காக்கிக் கொண்டு, தேவைப்படுபவற்றைப் பிறருக்கு வழங்கும் மாட்டின் செயல் - மனிதர்களுக்கு வழிகாட்டுகிறது. அரிசியை நமக்கு வழங்கிவிட்டு, அதனோடு இருந்த உமியை உணவாக்கிக் கொள்கிறது மாடு !

நெல்லை நமக்குத் தந்துவிட்டு வைக்கோலைத் தனக்காக்கிக் கொள்கிறது மாடு. எண்ணெய் நம்க்கு. பிண்ணாக்கு மாட்டுக்கு. கழுவிய அரிசி நமக்கு. கழுநீர் மாட்டுக்கு.

நம்மையும் நமது நலத்தையும் மட்டுமே எண்ணுவது தன்னலம்! மண்ணையும் மற்றவர்களையும் எண்ணி உழைப்பது பொதுநலம் !

தன்னல மறுப்பே சமுதாயத்தைத் தலை நிமிர வைக்கும் என எண்ணிப் பார்க்கச் செய்வது செய்வது மாட்டுப் பொங்கல் ! தனக்கான பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கும் இனங்கள் மட்டுமே, காலத்தால் பாதுகாக்கப்படும். தமிழினம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுமா? இந்த வினாவை எல்லோரையும் நோக்கி எழுப்புவதே இந்தத் தமிழர் திருநாள் ! பொங்கல் திருநாள் !

இந்த 21ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் அழியக்கூடிய மொழிகள் 00 எனப் பட்டியலிட்டனர் மொழி வல்லுநர்கள். அழியக்கூடிய 00 மொழிகளில் ஒன்றாக இடம் பெற்றிருப்பது தமிழ் ! உள்ளத்தை நடுங்க வைக்கும் செய்திதான் !

உலகின் மிகத் தொன்மையான மொழிகள் ஆறு எனப்பட்டியலிட்டு அவற்றில் வாழும் மொழியாக நிலைத்திருப்பது தமிழ் ஒன்று மட்டுமே என உலகம் உச்சிமுகர்ந்தது ஒரு காலம். அழிந்து போன மொழிகளாகக் கருதப்பட்ட ஈபுரு (இசுரேல்) மொழியும், மாண்டிரின் (சீன) மொழியும் இப்போது உயிர் பெற்றுவிட்டன. உயிரோடு உள்ள தமிழோ ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒதுக்கப்பட்டும் ஒழிக்கப்பட்டும் வருகிறது.

தமிழே தமிழே அறிவாயா?
தமிழர் நாங்கள் அறிவோமா?
தமிழைக் கொல்வது தமிழன் கை !
தாயைக் கொல்வது மகனின் கை !

மொழியின் அழிவு - இனத்தின் அழிவு.
என உணராத நிலையில் தமிழர்கள் உள்ளனர்.

கல்வியில் ஆங்கிலம் !
கலையில் கலப்படம் !
இசையில் தெலுங்கு !
ஆட்சியில் இந்தி !
வழிபாட்டில் சமஸ்கிருதம் !
வாழ்வில் பண்பாட்டுக் குழப்பம் !

தமிழர் வாழ்வின் எல்லா நிலையிலும் குழப்பமும் கலப்படமும் புகுத்தப்படுகின்றன. பொங்கலுக்குப் பதிலாக தீபாவளி உயர்த்தப்படுகிறது. ஹோலி, ரக்சாபந்தன் முதலிய வடநாட்டுப் பண்டிகைகள் மூலமும் நஞ்சு கலக்கப்படுகிறது. தமிழெனும் உணர்வால் தமிழரே இணைக ! இப்பொழுது எழுப்ப வேண்டிய முழக்கம் இதுதான்.

மதமும் சாதியும் மனிதரைப் பிளப்பவை !
மனிதரை இணைப்பது மொழி !
மொழியும் முகமும் மனிதரின் இயற்கை அடையாளங்கள்.
முகமிழந்த மனிதன் - முண்டம் !
மொழி இழந்த மனிதன் - பண்பாட்டு அனாதை !

தமிழ் சோறு போடுமா? எனக் கேட்பதும் பண்பாட்டு அடையாளத்தை இரைப்பையோடு இணைத்துப் பேசுவதும் பாமரத்தனம் ! உணவு என்னும் ஒரே குறிக்கோளில் வாழ்க்கை சுழலுவது விலங்குகளுக்கு மட்டும்தான் ! ‘சாதி, மத,இன,மொழி வேறுபாடற்றஎன்று குழப்பக் குரல் கொடுப்போரும் இருக்கிறார்கள்,

ஒழிக்கப்படவேண்டியது - சாதி !
தனிவாழ்வோடு ஒடுங்க வேண்டியது - மதம் !
உயர்த்தி வளர்க்கப்பட வேண்டிய மொழியை -
அழிய வேண்டிய மதத்தோடும்
சாதியோடும் இணைத்துப் பேசுவது அறியாமை !

மொழிப்பற்று வந்த எவரும் விழிப்புற்று எழுவது இயற்கை !
தமிழன் கருவறைக்குள் கால் வைக்கக்கூடாதாம் - வைத்தால் தீட்டாகி விடுமாம் .

தமிழ் மொழியில் குடமுழுக்கும் வழிபாடும் செய்யக்கூடாதாம் ! - செய்தால் தீட்டாகி விடுமாம்.

விழிப்பவர் மட்டுமே வாழ்வில் இலக்கை அடைந்து ஏற்றம் பெற முடியும். “விழிப்போரே நிலை காண்பார், விதைப்போரே அறுத்திடுவார்.”

தமிழியக்கம்என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் வழங்கிய வரையறை இது. மக்களை நேசிப்பது என்பது, மக்களின் மொழியை நேசிப்பதுதான். மக்களை அச்சுறுத்துவதாகவும் மக்களுக்கு விளங்குவதாகவும் - கலையும் கல்வியும் மாறிவருவது அழிவின் அறிகுறி. தமிழில் கையெழுத்தும் முன்னெழுத்துப் போடுவதையும், திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப் படுத்துவதையும் இந்தப் பொங்கல் திருநாளில் செயல் திட்டமாக்குவோம்.

எந்தப் பெரிய பாதையும் சிறிய காலடியில்தான் தொடங்கும் !
இந்தத் திசையில் காலடி வைப்போம் எதிர்கால விழிப்பிற்காக !

பொங்கும் உணர்வுப் பொங்கல் இங்கே !
போகியில் பொசுங்கும் மடைமைகள் இங்கே !
எங்கள் தமிழர் எழுச்சி இங்கே !
இருளைக் கழுவும் ஒளிச்சுடர் இங்கே !

நன்றி
சூலூர் அறிவு நெறி
நூல் வெளியீட்டகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக