தொடக்கக் கல்வி பற்றி...

-இரணியன்

சமூக வாழ்வியலில்
மிகவும் ஆராயவேண்டியது,
திட்டமிட வேண்டியது,
அக்கறை கொள்ள வேண்டியது,
கவலை கொள்ள வேண்டியது,
கண்காணிக்க வேண்டியது,
பொறுப்புடன் பேண வேண்டியது
தொடக்கக் கல்வியே ஆகும்.

ஆனால் இந்நாள் தமிழகத்தில் உண்மையாக ஆராய்ந்து அமைக்கப் படாததாய், செப்பமாகத் திட்டமிடப் படாததாய், மெய்யான அக்கறை காட்டப் படாத்தாய், கவலையோடு வளர்க்கப் படாததாய், சீரான கண்காணிப்பு அற்றதாய், பொறுப்புடன் பேணப்படாததாய், ஓர் எதிலிக் குழந்தையைப்போல் திகைத்துக் கிடைப்பது தொடக்கக் கல்வியே எனலாம்.

ஓர் அரசின் முதற்பெரும் கடமை ஒவ்வொரு குழந்தைக்கும் நிறைவான கல்வியை மகிழ்வான முறையில் அளிப்பதே ஆகும்.

ஆனால் இன்றோ, அரசும், அலுவர்களும், ஆட்சியாளர்களும் கல்விக்காகும் செலவை வீண்செலவு என்றும் கருதுகிறார்கள். எனவே ஒப்புக்குச் சப்பையாக, எதையோ நினைத்து எதையோ செய்வது போல் கல்விப்பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தொடக்கக்கல்விக்கு மிகவும் தேவைப்படுவது அழகிய சூழல் ! காற்றோட்டமான வகுப்பறைகள் ! குழந்தைகள் விளையாடுவதற்கேற்ற விளையாடுகளம் ! இன்முகமும் ஈடுபாடும் கொண்ட ஆசிரியர்கள் !

பழைய அழுக்குக் கட்டடங்கள், தூய்மை இல்லாத சுற்றுப்புறங்கள், மனநலம் பேணூம் விளையாட்டுகளுக்குரிய இடமும், ஏந்துகளும் அற்ற சூழல், கற்பித்தலில் புதுமை நாட்டமும், புதுநெறி உத்திகளும் அதிர்ந்திராத ஆசிரியர்கள் என இயங்கிக் கொண்டிருக்கிறது தொடக்கக்கல்வி.

வறுமையில் உழல்வோர், தாழ்த்தப்பட்ட மக்கள், கல்விக்காகச் செலவு செய்ய இல்லாதோர் மட்டுமே தம் குழந்தைகளை அரசு அல்லது அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்.

மற்ற தரப்பினர் தம் குழந்தைகளை ஆங்கிலவழி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள். ஒருபுறம் பெற்றோரின் ஆங்கில மோகம், மறுபுறம் அப்பள்ளிகளின் கணினிகளாலும் கட்டடங்களாலும், இயற்கை அழகு படுத்ததலாலும் ஏந்துகள் நிறைந்த விளையாடு களங்களாலும் தன்னைச் செய்து கொண்டுள்ள பொலிவு இவை பெற்றோரை ஈர்க்க, தரமான கல்வி இங்குதான் குழந்தைகளுக்குக் கிடைக்கும் எனப் பெற்றோர் நம்புகிறார்கள்.

எனவேதான் தமிழ்வழிப் பள்ளிகள் தாழ்ந்து கொண்டுள்ளன. ஆங்கிலவழிப் பள்ளிகள் கிளைத்துப் பெருகிக் கொண்டிருக்கின்றன.

ஆங்கிலப் பள்ளிகள் நடத்துவோர் யார்?

ஆங்கிலப்பள்ளி நடத்துதல் இன்று ஒரு தொழிலாக, ஒரு வாணிகமாக மாறிவிட்டது. நடத்துபவருகு அது நல்ல ஆதாயத்தித் தருகிறது. வருமானவரி செலுத்துவோருக்கு வரி விலக்குகள் பெறுவதற்கான வாய்ப்பைத் தருகிறது. எனவே கந்துவட்டிக்காரர்கள், பெரும் தொழில் அதிபர்கள், ஆலை அதிபர்கள் எனப் பலரும் ஆங்கிலப் பள்ளிகளை நடத்துகிறார்கள். இங்கே தாய்மொழி மறக்கடிக்கப்படுகிறது. தாய்மொழி பேசுதல் தண்டனைக் குரியதாகிறது. பள்ளி எல்லைக்குள் ஒரு மேலை நாட்டுச் சூழல் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. மதிலுக்கு வெளியே வாழும் சொந்த சமூகமும், சொந்த மொழியும், சொந்தப் பண்பாடும், சொந்த நிலமும் இழிவானவை என எண்ண வைக்கப்படுகின்றன. ஒர் சமூகம் அன்னது ஒரு தேசிய இனம் அல்லது ஒரு நாடு, தன் சொந்தத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள , சொந்தப் பண்பாட்டை வடிவமைத்துக் கொள்ள, சொந்தப் பொருளியலைக் கட்டமைத்துக் கொள்ள, சொந்த மொழியே பயன் தர வல்லது என்பதை உலகெங்கிலும் வாழும் கல்வியாளர்களும், சிந்தனையாளர்களும் உணர்ந்து இருக்கிறார்கள்.

மொழிதான் ஒரு சமூகத்தின் பாதுகாப்பு அரண் ! ஓர் இனத்தின் ஆணிவேர் ! ஒரு தேசம் தன்மானத்துடன் தன்னிறைவுடனும் வாழ்வதற்குத் தேவையான உயிர்ப்பை தரும் காற்றாகவும், மழையாகவும், ஒளியாகவும் திகழ்வது அதன் மொழியே.

அதன் மொழியைக் கல்வியில் இருந்து அப்புறப்படுத்துவது அந்த இனம் வேரற்றுப் பசையற்றுப் போவதற்கே வழிவகுக்கும்.

எனவே தமிழினம் வேர் உள்ளதாகவும் பசை உள்ளதாகவும் வாழ வேண்டுமானால், அதன் கல்வி தமிழாக விளங்க வேண்டும். தொடக்கக்கல்வி தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும்.

எனவே தரமான தமிழ்வழிக்கல்வி தகவான சூழலில் குழந்தைகள் அனைவருக்கும் தரமான முறையில் வழங்குவதே அரசின் தனி முதற் கடமை.

இதற்குத் தகுதியான கல்வியாளர்களைக் கொண்டு செப்பமான முறையில் பாடத்திட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டும். கல்விப்பணியில் நாட்டமும், கற்பித்தலில் ஈடுபாடும், குழந்தைகளின் மீது அளவற்ற பாசமும், கல்வியும், அறிவாற்றலும் உள்ள சுறுசுறுப்பான இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களை தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாகப் பணியமர்த்த வேண்டும்.

உலகளாவிய கற்பித்தல் முறைகளைக் கணக்கிலெடுத்து அவர்களுக்கு ஆசிரியப் பயிற்சி அளிக்க வேண்டும்.

தொடக்கக்கல்வி ஆசிரியப் பயிற்சி என்பது இந்திய ஆள்வினைப் பணியிலும் (..எஸ்) மேலானதாகக் கருதப்படுப் பேணப்பட வேண்டும்.

பல்கலைக்கழக் ஆசிரியரைவிட, கல்லூரி ஆசிரியரை விட, உயர்நிலைப் பள்ளி ஆசிரியரை விட, கல்விச்சிறப்பும், அறிவுமுதிர்ச்சியும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவை.

நாற்பத்தைந்து அகவையைத் தாண்டிய ஒருவர், குழந்தைகளுக்குக் கற்பிக்கும் மன மென்மையை இழந்து விடுகிறார். எனவே நாற்பத்தைந்து அகவைக்கு மேற்பட்டவர் பிறதுறைக்கு அல்லது உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும்.

மனச்சுமை, குடும்பக்கவலை, அமைதிக்குலைவு என்பன ஏற்படும்பொழுது குழந்தைகளுடன் பழகும் மனநிலை அற்றுவிடும். எனவே தொடக்கப்பள்ளி ஆசிரியரின் உயர் அகவை 45க்குமேல் இருத்தல் கூடாது

இக்காலத்தில், பத்தாம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளில் 25 விழுக்காட்டின் எழுத்துகளை முழுமையாகக் கற்காத நிலையில் உள்ளனர். எனவே எழுதவும் படிக்கவும் தடுமாறுகிறார்கள். கோவையைக் கேவை என்றும் சென்னையைச் சொன்னை என்றும் எழுதுகிறார்கள். சரியாக வாசிக்கத் தெரியாமல் அல்லற்படுகிறார்கள். வரிவடிவங்களை அவர்கள் சரியாக அறிந்து கொள்ளவில்லை. கணக்கியல் பயிற்சியும் அவர்கள் முறைப்படி பெறவில்லை. எனவே, எழுதப்பழகுதலும், வாசிக்கப் பழகுதலுமே கல்வியின் முதற்பணி ஆகும். தொடர்ந்து ஓவியம் வரைதல், வட்டம் சதுரம் வரைதல், வளைகோடுகள் வரைதல் தொடக்கப் பள்ளியில் தொடங்கப்பட வேண்டும். பார்த்து எழுதுதல், கேட்டு எழுதுதல், நல்ல கதைகளைக்கேட்டல், கதைகளைப் படிக்கச் செய்தல், பாடல்களைப் பாடப்பயிற்றுவித்தல், கலைநிகழ்ச்சிகள் கற்றல் என்பன தொடக்கக் கல்வியில் இடம்பெற வேண்டும்.

கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் என்பன உருக்களைக்கொண்டு கற்பிக்கத் தொடங்கி, பின் எண்ணாலும் எழுத்தாலும் கற்பிக்கப்பட வேண்டும். பாட்டும், இசையும், விளையாட்டும், அறிவியல் ஆக்கங்களைப் பார்த்தலும் உணர்தலும் புரிதலும் தொடக்கக் கல்வியில் சிறப்பாக நடைபெற வேண்டும்.

தொடக்கக்கல்வியில் முதன்மை இலக்கு மொழித்திறம் பெறுதல். தொடக்கக் கல்வியில் தன் சொந்த மொழியில் மொழித்திறம் பெற்ற மாணவன், பின் எந்த மொழியையும் எளிதில் கற்பான். மொழித்திறம் பெற்றுவிட்டால் அவன் எந்தக் கலையையும் எந்த அறிவையும் எளிதில் கற்றுணர்வான்.

எனவே, பாடநூல்கள்
கற்பித்தல் முறைகள்
கற்பிக்கும் ஆசிரியர் என்னும்

முந்நிலையைச் செழுமைப்படுத்துவதில்தான் தொடக்கக்கல்வியின் வெற்றி அடங்கியுள்ளது.

குடும்பக்கட்டுப்பாட்டிற்கு ஆள் சேர்ப்பவராய், புள்ளி விளக்கம் திரட்டுபவராய், மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளராய், உணவுப் பங்கீட்டு அட்டை வழங்குநராய்த் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அலைந்து கொண்டிருக்கும் நிலைகள் முற்றிலும் மாற்றப்பட வேண்டும். கல்விப்பணி ஆர்வலர்களால் அப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது, தாய்மண்ணையும் மொழியையும் சமூகத்தையும் நேசிப்பவர்களாய் அவர்கள் வளர்ச்சியடையும்போது தமிழகத்தில் தொடக்கக்கல்வி வெற்றி இலக்கை நோக்கி நடையிடும். தாய்த் தமிழ்ப் பள்ளிகளை முன் ஒப்புமையாகக் கொண்டு தொடக்கக் கல்வியைத்
திட்டமிடுவது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக