கல்வியின் திசை

- கே.தங்கவேல்
மார்க்சிய சிந்தனையாளர்

இங்கு ஒரு தனிமனித வளர்ச்சி முதல் தேசத்தின் வளர்ச்சி வரை தீர்மானிக்கின்ற அடிப்படைகளில் தலையாயது கல்வியே ஆகும். குறிப்பாக, மனிதரின் ஆளுமையை வளர்க்கும் பேராற்றல் மிக்க சாதனமாக கல்வி திகழ்கின்றது. இவ்வகையில் பார்த்தால் கல்வி கற்பது ஒவ்வொரு மனிதரின் பிறப்புரிமை ஆகும்.

அதே சமயத்தில் தேசத்தின் பள்ளிகளின் வகுப்பறைகளில் கிடைக்கும் அறிவு வெளிசங்களின் தாக்கங்களைவிட சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளின் தாக்கம் கூடுதலாய் உள்ளது. மாற்றங்களை விரும்பாத சமூகமாய் நமது சமூகம் உள்ளது.

எனவே, மாணவர்களின் வளர்ச்சிக்கும், சுய ஆளுமைக்குமான கல்வியை அளிக்கத் தக்கதொரு கல்விமுறை நமக்குத் தேவைப்படுகிறது.

ஆனால், தற்போது நம்மிடமுள்ள கல்விமுறை மேலிருந்து நம்மேல் திணிக்கப்பட்ட, ஆங்கில ஏகாதிபத்தியம் வடிவமைத்த மெக்காலே கல்விமுறை ஆகும். இது நமது பாரம்பரிய பண்பாட்டைக் கணக்கில் கொள்ளாதது.

தற்போதைய அதிகார மையங்களில் உள்ளவர்களால் இம்முறையானது அதன் அடிப்படை மாற்றப்படாமலேயே செம்மைப்படுத்தப்படுகிறது.

எனவே, இன்றைய கல்விமுறை மற்றும் மற்றும் கற்பித்தல் முறைகளில் சில அடிப்படை மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இவ்வழியில் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

மாணவர்களுக்கு தாங்கள் பிறந்த மண் சார்ந்த கல்வியும், மொழி சார்ந்த கல்வியும், கலாச்சாரம் சார்ந்த கல்வியும் அவசியமானது ஆகும். அவ்வகையில் பன்முகத்தன்மை கொண்டு நமது சமுதாய அமைப்புக்குத் தக்கபடியான ஒரு பாரம்பரியமும், பண்பாட்டுத் தன்மையும், நவீன வளர்ச்சி சிந்தனைகளும் கொண்ட கல்வி முறையை நமது கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூட்டு முயற்சியில் உருவாக்கிட வேண்டும். அதனை அரசால் அங்கீகரிக்கப்படச் செய்ய வேண்டும்.

அத்தகையதொரு கல்விமுறையிலான கற்பித்தலே தனிமனித வளர்ச்சியிலும், தேச வளர்ச்சியிலும் புதியதோர் வெளிச்சம் பாய்ச்சும்.

கற்பதும்.... கற்பித்தலும்....

கல்வி கற்றிட பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தைகள் பச்சைக் களிமண் போன்றவர்கள். அவர்களில் அறிவாளிகள், முட்டாள்கள் என யாருமில்லை. பள்ளியில் அவர்களின் வகுப்பறை கதைநாயகர்காள் ஆசிரியர்கள்தான். வீட்டில் சொன்னசொல் கேட்காத குழந்தைகள்கூட வகுப்பில் ஆசிரியர் சொல் கேட்கின்றன. கற்றுக் கொள்கின்றன.

ஆசிரியர்கள் இக்குழந்தைகளை அன்பு, பண்பு, அரவணைப்பு மூலமாகவே கற்பிக்க வேண்டும். குழந்தைகளின் உலகம் கேள்விகளின் உலகம். அவர்களின் கற்கும் ஆற்றலும் அளவற்றது. ஆனால், பெரியவர்களான நாம் பொதுவாக இதை ஏற்றுக் கொள்வதில்லை. விரும்புவதில்லை.

தொணதொணன்ன்னு பேசாதே...”, “கம்முனு இரு...”என வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகளை அடக்குகிறோம் என்றால் வீட்டுக்கு அடுத்து குழந்தைகளின் உல்கமான பள்ளியிலோநான் சொல்வதைக் கேள்! பாடத்தைக் கவனி! படிப்பதை உருப்போடு; கேட்பதற்குப் பதில் சொல்; நீயாக அடங்காப் பேச்சாளித் தன்மாகக் கேள்விகள் கேட்காதே ! முந்திரிக்கொட்டை மாதிரி பதில் சொல்லாதே !” என்னும்படிதான் ஆசிரியர்களின் கற்பித்தல் நடக்கின்றன.

இதனால் மாணவக் குழந்தைகளின் கற்கும் ஆர்வம், சுயமுனைப்பு கருகிப்போய் விடுகின்றது. கடவுள் இவ்வுலகத்தைப் படைத்தார் எனப் பாடம் நடத்துகையில் ஏன் சார் அந்த கடவுளை யார் படைத்தார்? என குழந்தைகளிடம் இயல்பாகப் பொங்கி எழும் கேள்விகள் ஆசிரியரின் கண்டன முகத்தைப் பார்த்ததும் தொண்டைக் குழியிலேயே அமுங்கிப் போய்விடுகின்றன.

இப்படித்தான் நாம் குழந்தைகளுக்குள் அலைபாய்ந்து எழும் ஏராளம் ஆயிசாக்கள் வாயிருந்தும் ஊமைகளாய் அடங்கிப் போய் இருக்கிறார்கள்.

இங்கே சொல்வதை எழுதும் மாணவரைப் பாராட்டும் பள்ளிகள் ஏராளம். ஆனால் சுயமாக எழுதும் மாணவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் பள்ளிகள் மிகச் சிலவே. தாய்த் தமிழ்ப் பள்ளிகள் மிகச் சிலவே. தாய்த் தமிழ்ப் பள்ளிகள் சுய ஆர்வத்தை வளர்க்கும் மையங்களாக விளங்குகின்றன.

அடுத்து பாடம் பயில வரும் மாணவக் குழந்தைகளிடம் பிழை திருத்தலாம். அதன் பொருட்டு அவர்களைக் கண்டிக்கலாம். ஆனால், பிரம்பெடுத்து பதம் பார்த்தல் கூடாது. இது கற்பித்தலி ஓர் அங்கமல்ல. ஒடுக்குதலின் ஓர் அங்கமாகும்.

அடியாத மாடு படியாது என்ற முன்னோர் பழமொழி மாட்டிற்குப் பொருந்தலாம். ஆனால் அதை மாணவர்களுக்குப் பொருந்திடல் தவறானது. மாணவர்கள் மாடல்லவே !

மேலும் கண்டிப்பது குழந்தைகளின் செயலை திருத்த உதவுகிறது. ஆனால் அதுவே எல்லை மீறித் திட்டுவது அவர்களை அவமானப் படுத்துகிறது. அடிப்பது பயப்படுத்தியும், திட்டுவது கோபப்படுத்தியும் மாணவர்களைக் கற்பதிலிருந்தே தனிமைப்படுத்துகிறது. பல ஆசிரியர்களும் கூட இதை விரும்புவது இல்லை என்பதும் உண்மை. ஆனாலும் அடித்தல், திட்டுதல் நடந்து கொண்டுள்ளதே !

இதன் அடிப்படை கவனிக்கப் பட வேண்டியது ஆகும். ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனில் சிறப்பு குறையும் பொழுதே குழந்தைகள்ன் பாடத்தைக் கவனிக்கும் திறன், உள்வாங்கும் திறன் குறைகிறது. அவர்களின் கவனமும் சிதறுகிறது. பாடத்தை அவர்கள் கவனிக்காமல் போவதன் காரணம் அலட்சியமல்ல. ஆசிரியரின் கற்பிக்கத் திறனின் அருஞ்சுவை வளக்குறைவு அவர்களைத் திசை திருப்பி விடுகிறது. தமது கற்பிக்கும் முறை குழந்தைகளை ஈர்க்கவில்லை என்பதை ஆசிரிய மனம் ஏற்க மறுக்கிறது. எனவே, திட்டுதலும், பிரம்பெடுத்தலும் நடக்கின்றது.

இதில் மற்றுமொரு கூறு, தவறு செய்தல் என்பதும்கூட குழந்தைகள் கற்றலின் ஒரு பகுதியே ஆகும். இடறி விழுதல் அறிவில் எழுதல் என்போம் நாம் அதை. எனவே, கற்பித்தல் எனும் நுட்பக்கலையைத் தேர்ச்சியோடு பயன்படுத்தி சுவையாகக் கற்றுத் தந்தால் எதையுமே எளிதாகக் கற்பிக்க முடியும்.

சாதாரணமாக.... நன்றாக.... மிகநன்றாக.... என ஆசிரியரின் கற்பித்தல் முறை ஒவ்வொரு குழந்தையிடமும் எந்த அளவில் உள்ளதோ, அந்த அளவுக்கும் கவனிப்புக்கும் ஏற்பவே அக்குழந்தையின் அறிவும் திறனும் வெளிப்படும்.

சமுதாயக்கல்வி

பொதுவாக நாம் அனைவரும் இந்த சமூகத்தில் வாழ்பவர்கள் ஆவோம். இந்த சமுதாய நடைமுறை பழக்க வழக்கங்களை ஒட்டியே நமது கல்வி முறையும் இருக்கிறது. இச் சமூகத்தை இப்படியே தொடர்ந்து நீடிக்க, எந்த அளவு விழிப்பூட்ட வேண்டுமோ அந்த அளவு மட்டுமே அறிவு விழிப்பூட்டும் கல்வி முறை இது.

பொதுவாக இந்திய சமூக அமைப்பின் மேலாண்மைச் சக்திகள் இந்த அமைப்பின் கட்டமைப்புக்கு தகுந்த அளவில் அரசியல், அறிவியல், வரலாற்றியல், பொருளாதார இயல், சமூகவியல், புவியியல் கற்பித்தலைக் கொண்ட கல்வி முறையையே அமுலில் வைத்துள்ளன.

மொழித்திணிப்பு, வரலாற்று உண்மைகள் தினிப்பு, நிலக்குவிப்பு, உழைப்புச் சுரண்டல், கலப்படம், கள்ளச்சந்தை, கையூட்டு போன்ற எண்ணற்ற சமூகச் சீர்கேடுகள் கண்டிக்கப்பட்ட களையப்படத் தக்க கற்பித்தல் இன்றில்லை. தப்பித்தவறி இருக்கும் ஒருசில கற்பித்தலையும் கற்பித்திட பல தடைகள் உள்ளன.

ஒருவர் தோட்டத்தில் 1000 மாம்பழங்கள் விளைத்துள்ளது. அதை நபருக்கு 2 ½ பழம் பகிர்ந்து தந்தால் எத்தனை பேருக்கு பழம் கிடைக்கும். என்ற சாதாரண வகுத்தல்ல் கணக்கைக்கூட ஒரு நிலப்பண்ணையார் தனது உற்பத்தியை பறிமுதல் செய்யத்தூண்டும் செயலாகக் கருதி அந்த முறையில் கணக்கு கற்பிப்பதை எதிர்த்துத் தடுத்தாராம். திறமமிக்க ஆசிரியர் ஒருவர் அந்தக் கணக்கை மாற்றி ஒருவரிடம் 100 ஏக்கர் நிலமுள்ளது. அதை நபருக்கு 1 ¼ ஏக்கர் எனப்பிரித்தால் எத்தனை பேருக்கு நிலம் கிடைக்கும்? என்று நடத்தினாராம்.

இவ்வாறு மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு தரும் கற்பித்தல் முறைகளைத் தேடிக் கண்டு அதை ஆசிரியர்கள் கற்பித்திட வேண்டும்.

இங்கே மாணவ மாணவிகளைச் சுற்றி ஆயிரம் தீங்கிழைப்புகள் நடக்கின்றன. அதைப்பற்றி மாணவர்கல் எழுப்பும் கேள்விகளை வரவேற்க வேண்டும். மாறாக அந்தக் கவலை உனக்கேன்? அங்கே ஆயிரம் நடக்கும்; அதைப்பற்றிக் கவலைப்படாமல் நீ படி ! முன்னேறு ! மற்றவர்களைப் பற்றி உனக்கென்ன கவலை என மாணவரின் சமூக உணர்வைச் சுருக்கி விடுகிறோம் நாம். சமூக உணர்வே அற்றவர்களாக வளர்த்துவிடுகிறோம் நாம்.

கடைசியில் இப்படி வளரும் மாணவர்களே ஒரு சமுதாயமாக மாறி தாறுமாறாகி போகும்பொழுது, ஒன்றுமே சரியில்லை சமூகத்தில். கையூட்டு தலைவிரித்தாடுகிறது. வன்முறை தாண்டவமாடுகிறது. ஆபாசம் குமட்டலெட்டுகிறது. இதைப்பற்றி யாருமே இங்கு கவலைப்படுவதில்லை, என கவலைப்படுத்துவதும் நாம்தான் !

எனவே, மாணவர்களின் தேவைகளை மதிப்பதும் எதிர்கொள்வதும் அம்மாணவர்களோடு நாமும் சேர்ந்து விடைகளைத் தேடுவதுமாக ஆசிரியர்களின் கல்வி கற்பித்தல் அமைய வேண்டும்.

கூட்டு விளையாட்டுகள், ஆய்வுக்குழுக்கள், சுற்றுப்பயணங்கள் மாணவர்களுக்கு கூட்டு வாழ்க்கை, கூட்டுச் சிந்தனையைத் தரும் முதல் படிகள் ஆகும். இதன் அடுத்த படி நல்ல சமூகமக - மனிதர்களாக அஞ்சாமை, துணிவு, வீரம், பொறுமை, நிதானம், இனிமை, மகிழ்ச்சி ஆகிய நற்பண்புகள் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கும்.

மேற்கண்ட சமுதாயக் கல்வித் திசையில், தாய்த் தமிழ்ப் பள்ளிகள் பலரும் பாராட்டும் செயல்பாடுகளைத் தொடங்கிட வேண்டும்.

கற்றுக் கொள்வோம் ! கற்றுத் தருவோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக