கல்வியும் நாமும்

- த.பரசுராமன்
புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையம்

கல்வியின் நோக்கம் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவது, ஒரு குழந்தை சில ஆண்டுகள் கல்வி கற்கிறது என்றால் தொடர்ந்து அக்குழந்தையின் நடத்தையில் மாற்றம் இருக்க வேண்டும். மனித வாழ்க்கையில் நடத்தை மாற்றம் ஏற்படுவது இயல்புதானே எனும் கேள்வி இங்கே எழுகிறது. ஏனென்றால் மனிதன் நாள்தோறும் கற்றுக் கொள்கிறான். முற்காலத்தில் பள்ளிக்கூடம் எனும் அமைப்பு ஏற்படாத நிலையில் மனிதன் அன்றாட வாழ்விலிருந்து பிற மனிதர்களுடன் எப்படிப் பழக வேண்டும். தன்னைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களை அழிக்காமல் எவ்வாறு செய்ய வேண்டும் என்றெல்லாமல் கற்றுக் கொண்டான். காலப்போக்கில் கல்விக்கூடம் எனும் அமைப்பு தோன்றியது. அதாவது புதிய கண்டுபிடிப்புகளால் உருவான புத்துலகுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் மனிதர்களை மாற்றவே கல்விக்கூடம் பிறந்தது. நாளடைவில் எல்லோருக்கும் கல்வி எனும் சிந்தனை பிறந்து தொழிற்கல்வி பொதுக்கல்வி ஆனது.

முன்பு அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப இயற்கையாகவே வெவ்வேறு செய்திகளைக் கற்றுக் கொள்வதற்கு மாறாகப் பொதுக் கல்வியில் எல்லாரும் ஒரே மாதிரியானவற்றைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினர். இதனால் தொழில் அடிப்படையிலான சமூகப் பார்வையில் எழும் ஏற்றத் தாழ்வுகல் பெருமளவில் குறைந்தன. ஆயினும் உடல் உழைப்பு மேற்கொள்வோர், மூளை உழைப்புத் தருவோர் எனும் பாகுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் தான் வாழும் இடத்திற்கு அந்நியனாக மாற வேண்டிய சூழ்நிலை பலருக்கும் ஏற்படுத்திவிட்டது. சான்றாக ஒரு வேளாண் கிராமத்தில் வாழும் மாணவன் கல்வி கற்ற பிறகு அக்கிராமத்திற்குப் பொருந்தவனாக மாறிவிடுகிறான். இவ்வாறிருக்க நமது கல்வி எப்படிப்பட்ட நடத்தை மாற்றங்களை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்? குறைந்த அளவு. அவர்கள் இன்றைய சமூகச் சூழலைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக மாற வேண்டும். புரிந்து கொள்வதோடு அதை எதிர்கொள்ளும் மன வலிமையும் தேவைக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்ளும் தகைமையையும் பெற வேண்டும். ஒரு வேளாண் கிராமத்து மாணவன் கல்வி கற்ற பிறகு மூளை உழைப்புத் தரும் வேலை கிடைக்கவில்லையானால் வேளாண் பணிகளில் ஈடுபட்டுத் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களைவும் காப்பாற்றிக் கொள்ளும் மனவலிமை பெற வேண்டும். இவ்வாறு இன்றைய கல்வி இருக்கிறதா என்றால் விடை சொல்லத் தயங்க வேண்டியதில்லை. இல்லை என்று உடனே சொல்லிவிட முடியும். எனவே இன்றைய கல்வியைப் பொருளுள்ளதாக மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாதது. மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும், அதிக மதிப்பெண்களும் எடுக்க வேண்டும், அதே நேரத்தில் அவர்கள் நல்வாழ்வு வாழ்வதோடு அவர்கள் வாழும் உலகம் வாழவும் உதவ வேண்டும். அதாவது ஒரு மாணவனுக்குக் கல்வி அவன் வாழ்வுக்குத் தேவையான பொருளை நேர்மையான முறையில் ஈட்ட உதவுவதோடு பிறரும் நல்வாழ்வு வாழ உதவவும் தொடர்ந்து மனிதகுலம் வாழ உலக வளங்களை அழிக்காமல் விட்டு வைக்க உதவவும் வேண்டும். இவ்வாறில்லாமல் தான், தன்குடும்பம் என அளவுக்கு மேல் சுயநலத்துடன் வாழக் காரணம் இன்றைய கல்வியே. இதனால்தான் பெற்றோர்களையே கடைசி காலத்தில் கவனிக்காத, முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகிற குழந்தைகள் பெறுகி வருகின்றனர். மிகச் சிறந்த பள்ளி என்று பலரும் நினைக்கிற பள்ளியிலிருந்து வரும் மாணவர்கள்தான் கல்லூரியில் மிக ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள் எனப் பேராசிரியர்கள் பலரும் சொல்வதைக் கேட்க முடிகிறது. எனவே மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பை மட்டும் கொண்டு பெற்றோர்கள் பள்ளியைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது அவர்களுக்கும் இந்தச் சமுதாயத்திற்கு நல்லது. நல்ல கல்வி என்பது எது எனத் தெரிந்திருந்தால் பள்ளியைத் தேர்ந்தெடுக உதவியாக இருக்கும், சுருக்கமாகச் சொன்னால் குழந்தை பள்ளிகுச் செல்லும் முன்பு எவ்வாறு இயற்கையாகக் கற்றுக் கொள்கிறதோ அதன் தொடர்ச்சியாகப் பள்ளிக் கல்வியும் அமைய வேண்டும்.

அமெரிக்காவில் குழந்தைகள் கல்வி வல்லுநர் ஒருவரிடமும் ஒரு பெண்மணி எந்த வயதில் குழந்தைக்குக் கற்பிக்கத் தொடங்கலாம் என்று கேட்டார். அதற்கு அந்த வல்லுநர் உங்களுக்குக் குழந்தை பிறந்து விட்டதா என்று கேட்டார். அம்மையார் குழந்தைக்கு மூன்று வயதாகிறது என்று பதில் சொன்னார். உடனே வல்லுநர் அடடா மூன்று வருடங்களை வீணாக்கி விட்டீர்களே. இப்போதே ஓடுங்கள் குழந்தையிடம் உடனே கற்பித்தலைத் தொடங்குங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வீண்தான் என்றார். மற்றொரு நிகழ்ச்சி நீங்கள் முன்பு தொலைக்காட்சியில் அடிக்கடி பார்த்த நிகழ்ச்சி ஒருவர் தன் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து வருகிறார். குழந்தை ஏதேபோல் இருக்கிறது, சரியாகச் சாப்பிடுவதில்லை. எனப் பலவாறு சிக்கல்கலைச் சொல்கிறார். மருத்துவர் சோதித்துப் பார்த்துவிட்டுக் குழந்தை பள்ளிடில் ஒரே இடத்தில் இருந்து பாடம் படிப்பதால் வந்த சிக்கல் இது, இதற்கு மருந்து ஏதும் இல்லை. பள்ளியை மாற்றுங்கள். குழந்தையை விளையாட அனுமதிக்கும் பள்ளியாகப் பார்த்துச் சேருங்கள் என்கிறார்.

இந்த இரண்டில் முதல் நிகழ்ச்சியில் எவ்வளவு விரைவாகக் கல்வியைத் தொடங்க வேண்டுமோ அவ்வளவு விரைவாகத் தொடங்க வேண்டும் என்கிறார்கள். இரண்டாம் நிகழ்ச்சியில் பிஞ்சுக் குழந்தைகளுக்குக் கற்பிப்பது அவர்களைப் பாதிக்கும் என்கிறார்கள். இவற்றுள் எது சரி? இரண்டு நிகழ்ச்சிகளிலும் பேசப்படுவது ஒரே விதமான கல்வியா? அமெரிக்க அறிஞர் கூறியது எழுத்து, எண் கற்பிக்கும் கல்வியைத்தான். அதை எவ்வளவு விரைவாகத் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் தொடங்க வேண்டும் என்கிறார் அவர், அந்த வயதில் எழுத வைப்பதல்ல நோக்கம். ஆனால் எழுத்துகளையும் சொற்களையும் அடையாளம் காணவும் பேசத் தொடங்கியவுடன் வாசிக்கச் செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார்கள். இதில் மிகமிக முக்கியமானது குழந்தை அவற்றை விரும்பிச் செய்ய வேண்டும் என்பதுதான். எக்காரணம் கொண்டும் குழந்தைக்கு வெறுப்புகூட அல்ல, விருப்பமின்மைகூட ஏற்படாதவாறு செய்ய வேண்டும் என்கிறார். இரண்டாவது நிகழ்ச்சியும் இதையேதான் சொல்கிறது. குழந்தை அந்த வயதில் எப்படி இருக்க விரும்புகிறதோ அதே வழியில்தான் கற்பிக்க வேண்டும். மாறாக ஒரே இடத்தில் தொடர்ந்து உட்கார வைத்து எழுதச் செய்து கொடுமைப் படுத்தினால் குழந்தைகள் எப்படித் தாங்கிக் கொள்ளும். எனவே நாம் குழந்தைகளின் கல்வி பற்றி அடிப்படையில் புரிந்து கொள்ளும்படியான கல்வியைக் கொடுக்க முடிந்தால் விரைவாகக் குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்க முடியாதபோது மிக இளவயதில் கல்வி கற்பிக்கத் தொடங்காமல் இருப்பதே நல்லது.

நமது சூழ்நிலையில் சொல்ல வேண்டுமானால் எல்.கே.ஜி, யு.கே.ஜி என்று சொல்லப்படுகிற மழலையர் வகுப்புகளிலும் முன் மழலையர் வகுப்பு என்றும் அதற்கு முன்பும் இரண்டு மூன்று வயதில் இன்று குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த வகுப்புகளை விளையாட்டு முறையில் நடத்தும் பள்ளிகள் இருந்தால் அதில் சேர்க்கலாம். அப்படிப்பட்ட பள்ளிகள் இல்லாதபோது ஐந்து வயது ஆனபின் முதல் வகுப்பில் சேர்த்தால் போதும். குழந்தைகள் அதிக அறிவு பெற வேண்டும் என எதிர்பார்த்து நாம் மிக இளவயதில் சேர்க்கப் போய் கல்வியில் வெறுப்பு ஏற்பட்டு மனமும் உடலும் கெட்டுப் போகும்படி ஆவதைவிடச் சில ஆண்டுகள் கழித்துப் பள்ளியில் சேர்ப்பதால் தீமை ஒன்றும் ஏற்படாது.

ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் கற்பிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள எளிதான வழி அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நாள்தோறும் பள்ளிக்குப் போக வேண்டும் என்று விரும்புகிறார்களா அல்லது விடுமுறைகளை ஆவலாக எதிர்பார்க்கிறார்களா என்பதைக் கொண்டு கண்டுபிடிப்பதுதான். இன்று உனக்கு உடல்நலம் சரியில்லை, பள்ளிக்குப் போக வேண்டாம் என அம்மா சொன்னால் இல்லை, நான் பள்ளிக்குப் போவேன் என்று குழந்தை சொல்ல வேண்டும். அப்போதுதான், அது நல்ல பள்ளிக்கூடம். அப்படிப்பட்ட பள்ளி எங்கள் பகுதியில் இல்லையே. நாங்கள் என்ன செய்வது? என்கிறீர்களா? இல்லாவிட்டால் குறைந்தது ஐந்து வயது வரை குழந்தைகள் வீட்டிலேயே இருக்கட்டும்.

மேலைநாடுகளில் பெரும்பாலும் ஏழு வயதில்தான் முதல் வகுப்பில் சேர்கிறார்கள். அதற்கு முன்பும் குழந்தைகள் பள்ளிக்குப் போவார்கள். ஆனால் அது கட்டாயம் இல்லை. மேலும் அங்கு மழலையர் வகுப்புகள் போல் சொல்லித்தரப் படுவதில்லை. குழந்தைகள் பிற குழந்தைகளுடன் இணைந்து செயல்படவும் பள்ளிச்சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்ளவும் ஆயத்தப் படுத்துகிறார்கள். 1984ஆம் ஆண்டிலிருந்து ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கச் சோவியத் நாட்டில் முடிவு செய்யப்பட்டது. அது குறித்து எழுபதுகளிலேயே பெரும் விவாதங்கள் நடந்ததாகவும், அது குழந்தைகளுக்குப் பாதகமாக அமையாதா? அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து ஓராண்டைப் பிடுங்கி விடாதா? எனக் கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் சோவியத் நாட்டு ஆசிரியரியல் அறிவியல் பேரவை உறுப்பினர் அ.வி.பெத்ரோவ்ஸ்கி குழந்தைகள் வாழ்க நூலுக்கு எழுதிய அணிந்துரையில் தெரிவிக்கிறார். நூலின் ஆசிரியர் அமனஸ்வீலி அவர்களும் ஆரம்பத்தில் பெற்றோர்கள் சந்தேகப்பட்டனர். இந்த வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமா? எதற்கு அவசரம்? குழந்தைகளின் மனநிலை இதற்கு அணியமாக இல்லை என்றார்கள் எனக்குறிப்பிடுகிறார். மேலும் அவர் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதைப் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார். ஆறு வயதுக் குழந்தையைப் பள்ளி மாணவராக மட்டும் பார்க்காமல் பன்முக வாழ்வைக் கொண்ட, சுற்றியுள்ளவர்களுடன் சிக்கலான பரஸ்பர உறவுகளையுடைய ஒரு வளரும் மனிதனாகப் பார்ப்பது, இதற்கேற்றபடி ஒவ்வொரு குழந்தையின் உண்மையான வாழ்க்கை, மகிழ்ச்சி, அதிருப்தி, தேவைகள், நாட்டங்கள், திறமைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்வதன் மூலமாக மட்டுமே அவர்களைப் புரிந்து கொண்டு வளர்க்க முடியும் என்று காட்டுவது, முதல் வகுப்புக் குழந்தைகளுக்கு ஏற்ற அதே முறையை இயந்திர கதியாக இவர்களுக்கும் பயன்படுத்தக்கூடாது என்று தெள்ளத் தெளிவாக நிரூபிப்பது என் முன் இருந்த கடமைகளாகும் என்கிறார். இதிலிருந்து நாம் இரண்டு செய்திகளைப் புரிந்து கொள்ள வேண்டும். வளர்ந்த நாட்டு மக்கள் நம்மைப் போன்று குழந்தைகளை விரைவாகப் பள்ளிக்கு அனுப்ப ஆர்வம் காட்டாததோடு அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் அவ்வாறு அனுப்புவதால் பயன் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறான். இளம் வயதில் பள்ளிக்கு அனுப்பப்பட்ட குழந்தைகளுக்கும் நம்மைப்போல் எல்லாவற்றையும் திணித்துவிட வேண்டும் என்று எண்ணி அவர்கள் செயல்படவில்லை.

இன்றைய விரைவு உலகில் நாம் எதற்கெடுத்தாலும் மேலை நாடுகளைப் பின்பற்றுகிறோம். ஆனால் கல்வித்துறையில் மட்டும் அவர்களுடைய வளர்ச்சியைக் கண்டு கொள்வதில்லை. உண்மையில் நாம் நம்மிடம் உள்ள பல நல்ல பழக்கங்களை விட்டுவிட்டு அவர்களுடைய தவறான பழக்கங்களைப் பின்பற்றுகிறோம். அவ்வாறில்லாமல் நம்மிடம் உள்ள தவறான பழக்கங்களை விட்டுவிட்டு அவர்களிடமுள்ள நல்ல பழக்கங்களைப் பின்பற்றினால் நாம் அவர்களைவிடச் சிறந்து விளங்க முடியும். ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் பிற மொழி வாயிலாகக் கற்பிக்கப் படவில்லை. அதுமட்டுமல்ல முதல் வகுப்பிலேயே அவர்கள் தாய்மொழியல்லாத வேறு மொழியைக் கற்கத் தொடங்கவும் இல்லை. எடுத்துக்காட்டாக சுவீடன் நாட்டைப் பார்ப்போம். அங்கு ஏழு வயதில் முதல் வகுப்பில் சேர வேண்டும். பதினாறு வயது வரை ஒன்பது ஆண்டுகள் கட்டாயக் கல்வி. ஒரு குழந்தைகூட பள்ளிக்குச் செல்லாமல் இருக்க முடியாது. குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பாவிட்டால் பெற்றோருக்குத் தண்டனை கிடைக்கும். எல்லாருக்கும் கல்வி ஸ்வீடிஸ் மொழியில்தான். நான்காம் வகுப்பில்தான் ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்குகிறார்கள். அதன்பின் சில ஆண்டுகள் கழித்து வேறொரு மொழியைக் கற்கத் தொடங்குகிறார்கள். அதுவும் ஒரு மொழியாக மட்டுமே. பிறகு ஏழாம் வகுப்பில் பிரஞ்சு அல்லது ஜெர்மன் மொழியை விருப்பப் பாடமாக மாணவர்கள் படிக்கத் தொடங்குகிறார்கள். விருப்பப்பாடம் என்பதால் எல்லோரும் படிப்பதில்லை. யாருக்குப் பல மொழிகள் படிப்பதில் ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். இதேபோல்தான் பிற ஐரோப்பிய நாடுகளிலும், எல்லோரும் தாய்மொழியிலேயே கல்வியைத் தொடங்குகிறார்கள். அம்மொழி வழியாகவே அறிவியல், கணிதம் போன்ற பாடங்கள் எல்லாம் படிக்கிறார்கள். சில ஆண்டுகள் கழித்துதான் ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்கத் தொடங்குகிறார்கள். அதன்பின் சில ஆண்டுகள் கழித்து வேறொரு மொழியைக் கற்கத் தொடங்குகிறார்கள். இது பல நாடுகளில் விருப்பப் பாடம்தான். சில நாடுகளில் நான்காவதாகக்கூட ஒரு மொழியை விருப்பப்பாடமாகக் கற்கிறார்கள். ஆனால் நாமோ பால்குடி மறவாப் பச்சிளங் குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லித் தரத் தொடங்குகிறோம். அம்மொழியிலேயே பாடங்களையும் கற்பிக்கிறோம். பலர் தமிழை ஒரு பாடமாகக் கூடப் படிக்க வைப்பதில்லை. இந்தக் கொடுமையால் நன்மை கிடைப்பதாக நாம் நம்புகிறோம் அல்லது நம்ப வைக்கப்படுகிறோம்.

சிறு வயதிலிருந்தே ஆங்கிலம் படித்தால் ஆங்கிலத்தில் சிறந்து விளங்க முடியும் என்றும் ஆங்கிலம் வழியாகப் பிற பாடங்களைப் படிப்பதால் உயர் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என்றும் கற்பனைக செய்து கொள்கிறோம். ஆனால் நடப்பது நேர் மாறாக இருக்கிறது. ஆங்கில வழியில் பாடங்களைப் படிப்பதால் நன்கு புரிந்து கொள்ளாமல் அரைகுறையாகப் புரிந்து கொண்டு மனப்பாடம் செய்து கற்பதால் உயர்கல்வியில் பெரும்பாலோரால் தாக்குப் பிடிக்க இயலாமல் போகிறது. ஆனால் பள்ளியில் தாய்மொழி வழியாக நன்கு புரிந்து கொண்டு படிப்பவர்களால் உயர்கல்வியில் வெற்றிபெற முடிகிறது. பள்ளியில் தமிழில் படித்து விட்டு உயர்கல்வியில் வேறுமொழி வழியாகப் படிப்பது கடினம் அல்ல. தொடக்கத்தில் சற்று கடினமாக இருப்பினும் ஓரிரு மாதங்களிலேயே சரியாகிவிடும். இதனால்தான் ரஸ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்குக்கூடச் சென்று நமது மாணவர்கள் அந்த மொழிகளில் உயர்கல்வி பெற முடிகிறது. மேலும் நமது மாணவர்கள் ஏற்கனவே ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் படிப்பதால் அவர்களால் எளிதில் மாறிக் கொள்ள முடியும். ஆனால் பாடங்களில் அடிப்படை அறிவு ஒழுங்காகப் பெறாமல் உயர்கல்வியில் வெற்றி பெறுவது சாத்தியமல்ல. எனவே ஆங்கில வழியில் படிப்பது உயர்கல்விக்கு உறுதுணையாக இருப்பதைவிட இடையூறாகவே இருக்கும். மேலும் இதனால் நடுத்தர, கீழ்த்தட்டுக் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களே பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள். நன்கு படித்தவர்கள் தாமாகவும் மேல்தட்டுக் குடும்பத்தினர் பிறர் வழியாகவும் பள்ளியில் தங்கள் குழந்தைகள் ஆங்கில வழியில் படித்தாலும் வீட்டில் அவர்கள் பாடங்களைப் புரிந்துகொண்டு படிக்கப் பல்வேறு வகையில் உதவுகிறார்கள். இதனால் இக்குடும்பக் குழந்தைகள் உயர் கல்வியில் சமாளித்துக் கொள்கிறார்கள். வெற்றியையும் பெறுகிறார்கள். இதை அறியாத நாம் நம் குழந்தைகளை ஆங்கில வழியாகப் படிக்க வைத்துப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம்.

புதுச்சேரி, விடுதலைக்கு முன் பிரான்சு நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது பிரான்சு நாட்டுக் கல்வி முறையே புதுவையில் இருந்தது. இன்றும்கூட அம்முறையில் படித்தவர்கள் பலரும் வெகுவாக அம்முறையைப் படித்தவர்கள் பலரும் வெகுவாக அம்முறையைப் பாராட்டிப் பேசுவதுண்டு. அதற்குக் காரணம் குறைவாகக் கற்பித்தல் ஆனால் முழுமையாகக் கற்பித்தல் எனும் அடிப்படையில் அக்கல்வி முறை அமைந்திருந்ததுதான். நாம் அதிகம் கற்பிக்கிறோம். ஆனால் அறைகுறையாகக் கற்பிக்கிறோம். இதனால் தானாகச் சிந்திக்கும் ஆற்றல் வளருவதில்லை. மாறாகச் செய்திகளை இயன்ற அளவு நினைவில் வைத்துத் திரும்பச் சொல்லும் பண்புதான் வளருகிறது. இதில் அதிகச் செய்திகளை நினைவில் வைத்திருப்பவர் திறமையானவராகவும், குறைந்த செய்திகளை நினைவில் வைத்திருப்பவர் திறமையற்றவராகவும் நம்பப்படுகிறார். மனப்பாடக் கல்வி வாழ்வில் எல்லா நேரங்களிலும் பயன் தருவதில்லை. ஆனால் சிந்தனைத்திறன் பெற்றவர்கள் எந்த நிலையிலும் செயல்பட முடியும். சிந்தனைத் திறன் பெற கற்றல் முழுமையானதாக அமைய வேண்டும். இதற்குக் கற்போரின் ஒத்துழைப்பு மிகமிக இன்றியமையாதது. கற்பித்தலுக்குக் குழந்தைகளின் ஒத்துழைப்பைப் பெறுவதையே பள்ளிகளில் முதலில் செய்ய வேண்டும். அதற்குக் குழந்தைகளுக்கும் பேசவாய்ப்பு அளிக்க வேண்டும். பள்ளியில் மட்டுமல்ல வீட்டிலும்கூட குழந்தைகள் பேசுவதைப் பெற்றோர் காது கொடுத்துக் கேட்க வேண்டும். இன்று பெரிதும் நமது சூழ்நிலையில் ஒரு வாய் பல காதுகள் எனும் முறையிலேயே செயல்கள் நடக்கின்றன. ஒருவர் பேச பலரும் கேட்கின்றனர். இந்த ஒரு வழிப்பாதை சிந்தனையை வளர்க்காது.

ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் டெட்ஸ்கோ குரோயானக்கி. அவர் முதல் வகுப்புப் படித்தபோது அவருடைய தொல்லைகள் தாங்காமல் பல பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு சொச்கு கொபயாஸி நடத்திய பள்ளிக்குத் தன் அம்மாவுடன் போனார். அங்கே பழைய ரயில் பெட்டிகளில் வகுப்புகள் நடந்தன. தலைமையாசிரியர் அறைக்குள் நுழைந்தவுடன் நீங்கள் ஸ்டேசன் மாஸ்டரா? தலைமை ஆசிரியரா? எனக் கேட்டாள் சிறுமி. நான்தான் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்றார் கொபயாஸி. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்றார் கொபயாஸி. இந்தப் பல்ளியில் சேர வேண்டும் என்றாள் சிறுமி. நீங்கள் வீட்டுக்குப் போங்கள். நான் குழந்தையுடன் பேச விரும்புகிறேன் என்று அம்மாவை அனுப்பிவிட்டுச் சிறுமியை ஒரு நாற்காலியில் அமரச் செய்தார். சிறுமி அமர்ந்ததும் தானும் அருகில் அமர்ந்து கொண்டு இப்பொழுது உன்னைப் பற்றி என்னிடம் சொல். உனக்கு என்னவெல்லாம் விருப்பமோ அவற்றையெல்லாம் சொல் என்றார். சிறுமி அவளுடைய பழைய பள்ளி, வீடு என்று தனக்குத் தோன்றியதையெல்லாம் கூறினாள். தலைமையாசிரியரும் அலுப்பு இல்லாமல் ஆர்வத்துடன் அப்படியா, அப்புறம் எனத் தொடர்ந்து கேட்டார். சிறுமியும் விடாமல் பல செய்திகளைக் கூறினாள். ஒருநிலைக்கு மேல் சிறுமியால் எதையும் சொல்ல முடியவில்லை. அப்போது தலைமையாசிரியர் குழந்தையின் தலையைத் தொட்டுப் போதும் நீ இப்பொழுது இந்தப் பள்ளி மாணவி ஆகிவிட்டாய் என்றார். பிறகு மணியைப் பார்த்து சாப்பாட்டு நேரமாகிவிட்டது என்றார். சிறுமியும் அம்மாவும் பள்ளியில் நுழைந்தபோது மணி எட்டு. பள்ளியின் சாப்பாட்டு நேரம் பன்னிரண்டு மணி. நான்கு மணி நேரம் கொபயாஸி சிறூமியின் பேச்சைக் கேட்டிருக்கிறார்.

தலைமையாசிரியருக்கு வேறு வேலை இல்லாததால் பொழுதைப் போக்குவதற்காக பேசினாரா? இல்லை. ஏற்கனவே பள்ளி தொடங்கப்பட்டு நாள்கள் அகிவிட்ட நிலையில் புதிதாக ஒரு குழந்தை பள்ளிக்கு வருகிறது. அதைப் பள்ளியோடு ஒன்றிவிடச் செய்யவே அவர் நீண்ட நேரம் பேசினார். மேலும் குழந்தைகள் அவர்களைப் பெரியவர்களைப் போல் நடத்துவதையே விரும்புவார்கள். சரியாகச் சொன்னால் அவர்கள் தங்களை ஒன்றும் தெரியாதவர்களாக, பெரியவர்களைவிட வேறுபட்டவர்களாக நடத்துவதை விரும்புவதே இல்லை. குழந்தைகளிடம் நாம் எதையாவது எதிர்பார்க்கிறோம் என்றால், அவர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நாம் முதலில் செய்ய வேண்டியது அவர்களை நம்மைப் போன்ற மனிதர்களாக மட்டுமே பார்ப்பதாகும். அப்படிப் பார்க்கத் தொடங்கும்போது அவர்கள் எளிதில் நம் வசப்படுவார்கள். நமக்கும் அவர்களுக்கு எதையும் எளிதில் கற்பிக்க முடியும். எனவேதான் குரோயானக்கி அந்தப் பள்ளியிலேயே தொடர்ந்து கற்றுப் புகழ்பெற்றார்.

இப்பொழுது கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என ஓரளவு புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் அத்துடன் நம் முன் ஒரு கேள்வி எழுகிறது. இவ்வாறான கல்வி தருகின்ற பள்ளி எங்கே இருக்கிறது? நல்ல கல்வியைத் தர முயல்கின்ற, பல்வேறு சோதனை முயற்சிகளைச் செய்கின்ற பள்ளிகள் என்றும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை எண்ணிக்கையில் குறைவு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலில் செய்ய வேண்டியது அந்தந்த ஊரில் இருக்கிற பள்ளிகளுள் சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது. நாம் இப்பொழுதும் சிறந்த பள்ளி என நினைத்துக் கொண்டுதான் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் பெரும்பாலும் அது அதிகக் கட்டணம் வாங்கும் பள்ளியாக, மாணவர்களை அடித்துத் துன்புறுத்தி மனப்பாடம் செய்ய வைக்கும் பள்ளியாக, குழந்தைகளின் பெற்றோர் இருவரும் நன்றாகப் படித்தவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிற பள்ளியாக, நமது சூழ்நிலைக்குப் பொருந்தாத வகையில் சீருடை கொண்ட பள்ளியாக, குறைந்த இடத்தில் நிறைய மாணவர்களை அடைத்து வைக்கும் பள்ளியாக, ஏராளமான வீட்டுப்பாடம் கொடுத்து மாணவர்களோடு பெற்றோரும் சேர்ந்து அவற்றைச் செய்யச் செய்யும் பள்ளியாக, தேர்ச்சி விகிதத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மாணவர்கள் பலரைப் பொதுத் தேர்வுக்குப் பள்ளியின் சார்பாக அனுப்ப மறுக்கும் பள்ளியாக, பிஞ்சுக் குழந்தைகளுக்குக் கடுமையாக நேர்முகத் தேர்வு நடத்தித் தேர்ந்தெடுக்கும் பள்ளியாக, மேல் வகுப்புகளில் முதல் ஆண்டிலேயே அடுத்த ஆண்டுப் பாடத்தையே நடத்தாமல் விட்டுவிடும் பள்ளியாக, செய்முறைத் தேர்வுகளில் எல்லாருக்கும் முழு மதிப்பெண் தர மதிப்பீட்டாளரைக் கவனிக்கும் பள்ளியாக, பொதுத் தேர்வுகளில் மாணவர்களைப் பார்த்து எழுத அனுமதிக்கும் பள்ளியாக, மொழிப் பாடங்களைச் சிறப்பாகப் படிக்க நேரம் பள்ளியாக, மதிப்பீடு செய்யாமலேயே அக மதிப்பீட்டிற்கு எல்லாருக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கும் பள்ளியாக இருக்கிறது. எனவே இவ்வாறு இல்லாத அல்லது குறைந்த அளவு தீமைகளைக் கொண்ட பள்ளியைத் தேர்ந்தெடுங்கள்.

அடுத்து நாம் செய்ய வேண்டியது நல்ல பள்ளிகளை ஆதரிப்பது. அப்பொழுதுதான் நல்ல பள்ளிகள் பெருகும். எல்லா ஊர்களிலும் நல்ல பள்ளிகள் இல்லை எனும் குறை நீங்கும். நமது ஆதரவு இருவகைகளிலும் அமைய முடியும். ஒன்று இயன்ற வகையிலெல்லாம் நன்கொடைகள் வழங்குவது. மற்றொன்று பலரிடமும் பேசிக் குழந்தைகளை இப்பள்ளிகளில் சேர்க்கவும் இயன்ற கொடைகளை வழங்கவும் செய்வது. மூன்றாவதாகவும் நாம் ஒன்றைச் செய்ய வேண்டும். உண்மையான கல்வி எல்லாருக்கும் வேண்டும். இந்தக் குரல் நமது சமுதாயத்திலிருந்து ஓங்கி ஒலிக்காதவரை இன்றைய கல்வி முறை எளிதில் மாறிவிடாது. எனவே நல்ல பள்ளிகளுக்கு ஆதரவாகக் கை கொடுப்போம். மோசமான கல்விக்கு எதிராகக் குரல் எழுப்புவோம் வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக