திருப்பூரில் நூற்றாண்டு கடந்த பள்ளி

-கவிஞர் சிவதாசன்
திருப்பூர் வரலாற்று ஆய்வு மையம்

செம்மொழியான தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு தமிழர்கள் மட்டுமல்லாது மாற்று மொழியினரும் வேற்று நாட்டினரும் அரும்பணி ஆற்றியுள்ளனர். இவர்களில் கிறிஸ்துவர்களின் பங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

தமிழில் முதன்முதலில் அகராதி தொகுத்தவர் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர். தமிழில் முதன்முதலில் அச்சுக்கலையை அறிமுகப்படுத்தியவர் சீகன் பால்கு. முதன்முதலில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் எல்லிதுரை. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்டவர் கால்டுவெல். முதன்முதல் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் வி.யு.போப். இவர்கள் அனைவரும் கிறிஸ்துவகளாகவும், வெளிநாட்டினராகவும் இருந்தாலும் தமிழ்மொழிக்கு மேற்கூறியவாறு ஆற்றிய பணி அரும்பணியாகும். மேலும் இதுபோன்றவர்கள் இன்றுவரையிலும் கல்விப்பணியையும் ஆற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இவ்வகையினர் திருப்பூரில் ஆற்றி வரும் கல்விப்பணி கல்விப்பணி இங்கு காண்போம்.

உலகளாவிய அளவில் கிறிஸ்துவ மதத்தில் இருபெரும்பிரிவுகள் உள்ளன. ஆதியில் தோன்றிய கத்தோலிக்கக் கிறிஸ்துவப் பிரிவை எதிர்த்து சீர்திருத்த எழுந்த இயக்கம் புராட்டஸ்ட்டண்ட் ஆகும். இதனை, ஏற்படுத்தியவர் மார்ட்டின் லுத்தர் என்ற ஜெர்மானியர் ஆவார். இவரது வழியொற்றி தமிழகத்தில் தோன்றியதே T.E.L.C என்கிற தமிழ் சுவிசேச லுத்தரன் திருச்சபை ஆகும். 1700களின் துவக்கத்தில் ஜெர்மனியிலிருந்து தமிழகத்தின் தரங்கம்பாடி கடற்கரையில் வந்திறங்கியவர் ‘சீகன்பால்கு’ ஆவார். இவரே முதன் முதைல் நம் நாட்டில் அச்சு இயந்திரம் நிறுவி, முதன்முதலில் பைபிலின் புதிய ஏற்பாட்டை தமிழில் பதிப்பித்தவர்.

இவர் தரங்கம்பாடியில் சேவையாற்றிய T.E.L.C திருச்சபை அமைப்பு திருச்சிக்கு இடம் மாறி ‘தரங்கைவாசம்’ என்ற பெயரில் தமிழகத்தின் தலைமை அமைப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் இதற்கு கிளைகள் உள்ளன. இதன் கிளை அமைப்பு ஒன்று அக்காலத்தில் திருப்பூரில் 1885ல் தோற்றுவிக்கப்பட்டது. திருப்பூரில் நொய்யலின் தென் கரையில் இத்திருச்சபை ஆரம்பிக்கப்பட்ட வீதிக்கு மிசன் வீதி என்றே பெயரானது.

ஆதியில் காலங்காலமாக நாட்டில் குருகுலக் கல்வி முறையே இருந்து வந்தது. பின்னர் அது திண்ணைப்பள்ளி, ஓராசிரியர் பள்ளி என்றவாறு மாறியது. நம் நாட்டில் ஆங்கிலேயர் காலத்தில் தான் முறையான பள்ளிக்கூடங்கள் தோன்றின. அவ்வகையில் 1885ல் திருப்பூரில் மிசன் வீதியில் இத்திருச்சபை 28.2.1912ல் T.E.L.C எனும் பெயரில் ஒரு ஆரம்பப் பாடசாலையை ஏற்படுத்தியது. இப்பள்ளியே திருப்பூரில் தோன்றிய முறையான முதற்பள்ளி ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக