கல்வி - இலக்கும் இயக்கமும்

-கல்வியாளர் : எஸ்.எரோணிமுஸ், திருச்சி.

இலக்கு :

பொதுவாக எந்தவொரு செயலுக்கும் ஒரு காரண காரியம் - இலக்கு உண்டு அதே போல கற்கும் கல்விக்கும் ஒரு இலக்கு, நோக்கம் உண்டு,.

அன்று குருகுல கல்வியில் கல்வி பயின்ற இரு இனத்தவர்கள் - அந்தணர்கள் மூளை பலம் (MENTAL POWER) பெறுவதும், சத்திரியர்கள் உடல் பலம் (Muscle power) பெறுவதும் நோக்கமாகக் கொண்டு, அதற்கேற்ப அந்தணர்கள் மந்திரங்களையும், வேதங்களையும், சத்திரியர்கள், வில்பயிற்சி, வாள் பயிற்சி, குதிரை ஏற்றம் பயிற்சி போன்ற போர் தந்திரங்களையும் கற்றனர்.

அதன்பின்னர் வந்த ஆங்கிலேயர் காலத்தில் இரு இனத்தாரிடம் மட்டும் இருந்த கல்வி எல்லோருக்கும் என பொதுவாக்கப்பட்ட போதிலும், எழுத்தர்களை, கணக்கர்களை உருவாக்குவதே அதன் நோக்கமாக இருந்த காரணத்தால் அதற்கேற்றாற்போல் மொழிப்பாடம், கணக்குப்பாடம் போன்றவைகளைக் கல்வியில் பாடமாக அமைத்தனர்.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர்முழு ஆளுமை பெற்ற மனிதனை உருவாக்குவதேகல்வியின் இலக்கு என நிர்ணயித்தனர். அதாவது தொடக்கக் கல்வியில் குழந்தையாய் நுழைபவன் பல்க்லைக் கழகப் படிப்பு முடித்து வெளியே வரும்போது முழு ஆளுமை பெற்ற மனிதனாய் வெளிவர வேண்டும் என இலக்கு வகுத்தனர்.

இந்த இலக்கை வகுத்தவர்கள் அதற்கான பாடங்களை தொகுக்கும் போது பழைய ஆங்கிலேய காலத்து பல்லவிகளையே பாடங்களாக்கிவிட்டனர்.

சுதந்திரமாய் இலக்கை மாற்றிய சுதந்திர நாடு அவ்வில்க்கை அடைவதற்கான வழிகளில் மட்டும் அடிமை விலங்குகளை அறுத்தெறிய மறந்தது.

இதனால் 63 ஆண்டுகள் உருண்டோடியும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இன்னும் எட்டப்படாமலேயே... நிராதரவாய்... நடுவீதியில் நலிந்து கிடக்கிறது.

கல்வி முழுமை பெறாமல் போன காரணத்தால் அதை கற்பவனும் முழுமை பெறாமலேயே போய் விடுகின்றான்.

முழு ஆளுமை பெற்ற மனிதனை உருவாக்குவதேகல்வியின் இலக்கு என நிர்ணயித்தவர்கள்... பாடங்களை அமைக்கும் முன் முழு ஆளுமை பெற்ற மனிதன் என்பவன் யார்? அவனை ஏன் உருவாக்க வேண்டும்? எப்படி உருவாக்குவது? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகண்டு அவற்றை பாடத்திட்டத்திற்குள்ளே கொண்டு வந்திருக்க வேண்டும்.

அல்லது தற்போதுள்ள ஆங்கிலம், அறிவியல், கணிதம், தமிழ், வரலாறு போன்ற பாடங்கள் எப்படி இந்த இலக்கை அடைய உதவிடும் என்பதையாவது வரையறுத்துச் சொல்லிட வேண்டும்.

இவையிரண்டையுமே செய்யாமல் இலக்கை மட்டும் நிர்ணயித்த் விட்டு அதை நோக்கிய இயக்கமே இல்லாமலிருப்பதால் இன்றைய கல்வி - அதன் பயன்பாடு கேள்விக்குள்ளாக்கியது. இலக்கை நோக்கிய பாதையில் அது பயனப்படாத வரையில் அனைவருக்கும் கல்வி என்பது அர்த்தமற்றதாகவே அமையும்.

இலக்கு சரியா?

மிருகங்கள் எந்தச் சூழ்நிலையிலும் மிருகங்களே.... அவை தன் நிலையிலிருந்து மாறுவதேயில்லை.... ஆனால் மனிதன் மட்டுமே மாறக்கூடிவனாக, யாரோடு சேர்கிறானோ அவனாகவே ஆகிவிடக்கூடியவனாக இருக்கிறான். கோழையோடு சேர்ந்தால் கோழையாகவும், வீரனோடு சேர்ந்தால் வீரனாகவும், தீவிரவாதியோடு சேர்ந்தால் தீவிரவாதியாகவும், ஆன்மீகவாதியோடு சேர்ந்தால் ஆன்மீகவாதியாகவும் சுயநலவாதியாகவும் மாறிக்கூடியவன் மனிதன். எனவே மனிதனாக பிறந்த அவன் வேறு நிலைக்கு (மிருக நிலைக்கு) மாறிவிடாமல் காப்பாற்ற வேண்டிய தேவை சமூகத்திற்கு உள்ளது . அதை கல்வி வழியாகக் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏனெனில் சமூகத்தின் அங்கமாக இருக்கும் அவன் நிறைவுள்ளவனாக இருந்தால் அச்சமூகம் நிறைவுள்ளதாய் இருக்கும்.

இலக்கை அடைவது எப்படி?

முழு ஆளுமை பெற்ற மனிதனை உருவாக்குவதுஎன்கிற தன் இலக்கினை அடைய கல்வி பின்வரும் மூன்று முக்கிய வேலைகளை செய்திட வேண்டும்.

முதலாவதாக...

முதல் வகுப்பில் குழந்தையாய் நுழைபவன் இறுதி வகுப்பில் முழு மனிதனாய் வெளிவருவதற்குள் அவனுள் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்படுகின்றன.

உடல், உள்ளம் (மனம்), அறிவு, ஆன்மீகம், உணர்வு, கலாச்சாரம், பொருளாதாரம், சமூகம் போன்றவைகளில் முறையாய் வளர்ந்திருப்பவனையே மனிதன் என சமூகம் ஏற்றுக் கொள்கிறது. இவைகளில் ஒன்று குறைவு பட்டாலும் அவனை மனிதன் என ஏற்றுக்கொள்வதில்லை. எனவே முழு மனிதனுக்கான இத்த்கைய வளர்ச்சிகளுக்கு வேண்டிய செய்தியை, அறிவை, ஞானத்தை சொல்லிக் கொடுப்பதுதான் கல்வி.

எடுத்துக்காட்டாக

முறையான உடல் வளர்ச்சியை பெற, உணவு, பயிற்சி, ஓய்வு, சுகாதாரம், நோய், மருந்து போன்ற பல்வேறு தலைப்புகளுக்கும் கீழ் விபரங்களை, அறிவை ஒருவன் பெற்றால்தான் அவன் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியை பெற முடியும். அதைக் கொடுப்பதே கல்வி. அதைப் போலவே மன வளர்ச்சி, உணர்வு வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என ஒவ்வொன்றுக்குள்ளும் அவன் கற்றுக் கொள்ள வேண்டியவைகளை கற்க வழி வகுப்பதே கல்வி.

ஆக மனித வளர்ச்சிகளான இவ்வளர்ச்சிகளுக்கு வேண்டிய விசயத்தை, அறிவை ஞானத்தை அளிப்பதே கல்வியின் முதல் வேலை....

இரண்டாவதாக....

இந்த வளர்ச்சிகளுக்கு வேண்டிய விசயம், அறிவு, ஞானத்தின் மேல் இன்றைய நாகரீக உலகம் பல தப்பறைகளை, போலிகளை போர்த்தி வைத்துள்ளது. அதனால் உண்டாகும் வீக்கத்தை, இதுதான் வளர்ச்சி என சித்தரித்துக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக அறிவு வளர்ச்சி என்பது கேட்கப்படும் கேள்விகளுக்கு டக், டக் என பதில் சொல்லுவதே என நாகரீக உலகம் போலித்தனத்தால் போர்த்தி வைத்துள்ளது. ஆனால் பக்கம் பக்கமாய் பதில் சொல்பவர்களைவிட அதிகமான வினாக்களை எழுப்பவனே அறிவாளி, என்பதே உண்மை.

இப்படி உடல், மன அறிவு, பொருளாதாரம் மற்றும் கலாச்சார வளர்ச்சி போன்ற அனைத்து வளர்ச்சிகளுக்கும் தேவையான விசயங்களில் நாகரீக உலகம் போர்த்தி வைத்துள்ள போலித்தனத்திலிருந்து கற்பவனை மீட்டெடுக்க வேண்டியது கல்வியே. தகவல் புரட்சி உலகில் பெறும் தகவல்களை எல்லாம் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் - அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

என உண்மை நிலை அறிய கல்வி கற்பவனை தூண்டிட வேண்டும். அப்பொழுது தான் அக்கல்வி சுதந்திரமான ஆளுமை பெற்ற மனிதனை உருவாக்க முடியும்.

மூன்றாவதாக....

ஒருவன் உடல், உள்ளம், அறிவு, ஆன்மீகம், உணர்வு, கலாச்சாரம், பொருளாதாரம், சமூகம் போன்ற வளர்ச்சிகளில் வளர்வது எதற்கென்றால் அதை சமுதாயத்திற்கு பயன்படுத்துவதற்காகத்தான். அப்பொழுது தான் மனிதன் முழு மனிதனாக ஆக முடியும். முழு ஆளுமை பெற்ற மனிதனை உருவாக்கவதே தன் இலக்கு எனச் சொல்லிடும் கல்வி இந்த சமூக அக்கறையை கற்பவனிடத்திலே உருவாக்கி அவன் சமூகத்திற்கு பங்களித்து அதன் மூலம் முழுமை பெறத் தூண்டிட வேண்டும்.

இப்படி மனித வளர்ச்சிகளுக்கு வேண்டிய செய்தியை, அறிவை, ஞானத்தை கொடுத்து மனிதனாக்குவது :

இந்த வளர்ச்சிக்குரிய கருத்தில் நாகரிக உலகம் போர்த்தி வைத்துள்ள போலித்தனத்திலிருந்து அவனை மீட்டெடுக்க உதவி செய்து சுய சிந்தனையுள்ள ஆளுமை பெற்றவனாக்குவது :

தன் வளர்ச்சி, தன் முன்னேற்றம் என்கிற சுய நலத்தோடு நின்று விடக்கூடிய மனிதனை, சமூக அக்கறை, சமூக பங்களிப்பு குறித்து வலியுறுத்தி அதன் வழியாய் அவன் முழுமை பெறச் செய்வது என்கிற முப்பெரும் பணிகளை கல்வி செய்யும் பொழுது தான் கல்வியின் இலக்கு இனிதாய் எட்டட்டும்.

ஒருவனுக்கு சிந்தனையை கொடுக்கக்கூடிய கருத்து, அக்கருத்தை கொடுக்கக்கூடிய கல்வி நிறைவுள்ளதாய் இருந்தால் தான் அதனை பெறுபவனும் நிறைவுள்ளவனாய் இருப்பான். அவன் வாழக் கூடிய சமுதாயமும் நிறைவு பெற்றதாய் இருக்கும்.

இதன் அடிப்ப்டையிலேயே வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் தங்களது குழந்தைகளுக்கான கல்வியை அமைத்துள்ளன.

இன்றைய கல்வியை நமக்கு அறிமுகப்படுத்திய ஆங்கிலேயர்கள் கூட தங்கள் கல்வியை குழந்தைகளுக்கேற்றார்போல் மாற்றிவிட்ட போதிலும் நாம் இன்னும் இறுக்கமாக அதைப்பிடித்து கிடப்பதும் கல்வி சாலைக்குள் நுழைபவன் அனைவரையும் அறிஞராகவும், பொறிஞராகவும், மருத்துவராகவும் மாற்றும் பாடங்களையே உருவாக்கி திணிப்பதும் இறுதி வரை அவர்களை மனிதர் ஆக்காமல் மழுங்கடிப்பதும் முடிவுக்கு வந்தால் தான் நமக்கு விடிவு கல்வியால் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக