கோவை மாவட்டக் கல்வி வரலாறு

-புலவர் செந்தலை ந.கவுதமன்

கோவை
மாவட்டத்தின் வளர்ச்சியும் சிறப்பும், இருநூறு ஆண்டுகளுக்குள் ஏற்பட்டவைதாம். கடின உழைப்பும், புதியன தேடும் விழிப்பும் அடுத்தடுத்த படிக்கட்டுகளை உருவாக்கி, இம்மாவட்டத்தை உயரே உயரே ஏந்திச்சென்றன.

கல்வியும் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே!’ எனும் பாவேந்தர் பாரதிதாசன் கருத்திற்கேற்ப புத்தகக் கல்வி, பட்டறிவுக் கல்வி எனும் இரட்டைத் தண்டவாளங்களைக் கோவை மக்கள் இயல்பாய் அமைத்துக் கொண்டனர். அதனால் வளர்ச்சித் திசையில் வேகம் காட்டுவது இம்மாவட்டத்திற்கு எளிதாய்ப் போனது.

வேரும் கனியும்

பழைய வரலாற்று வேர்கள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, புதிய வரலாற்றுக் கனிகளைப் பெற முடியும்.

ஒவ்வொரு துறைக்கும் உரிய காலத்தே பதிவு செய்வதும், அவற்றை உலகின் கைகளில் ஒப்படைப்பதும் முதன்மையானது அறிவுப்பணி.

கோவை மாவட்டத்தில் கல்வித்துறை பதித்த வரலாற்றுச் சுவடுகள், திசைமாறாத பயணத்திற்குத் தெளிவான வழியைக் காட்டும்.

அன்றைய திண்ணைப்பள்ளிகள்

தொடக்ககாலப் பள்ளிகள் அனைத்தும் கோவிலின் ஒருபகுதியாகவே இயங்கி வந்தன. எல்லா மக்களுக்கும் சமமாய்க் கல்வி வழங்க மறுத்த அவலம், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செலுத்திய நாடு இது.

கல்வி மறுக்கப்பட்டவர்கள், படிப்பு பெறும் வாய்ப்பை வழங்கிய திண்ணைப்பள்ளிகள் 1822க்குப் பின்பே தமிழகத்தில் வளர்ச்சி பெற்றன. அவையும் கோவிலைச் சார்ந்தே இயங்கி வந்தன.

கல்வி முயற்சிகள் அனைத்தும் அந்தந்த ஊர் மக்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. இதில் அரசு எந்தப் பொறுப்பும் ஏற்கவில்லை.

மாவட்ட, வட்டக்கல்வி நிறுவனங்கள் என்ற அளவில் 1822இல் அரசு முயற்சி எடுத்து, பயிற்றுமுறைச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. மாவட்டத்திற்கு இருவர் எனப் பயிற்சியாளர்கள் அங்கு அமர்த்தப்பட்டனர். அவர்கள் வழியாகத் திண்ணைப்பள்ளி ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டனர்.

மாவட்ட நிறுவனத்தில் ஆசிரியப் பயிற்சிபெற உரூபா பதினைந்தும், வட்ட (தாலூகா) நிறுவனத்தில் பயிற்சிபெற உரூபா ஒன்பதும் மாத உதவித் தொகையாக வழங்கப்பட்டன.

மாணவர் விரும்பித் தருவதைத் தவிர, கட்டாயப்படுத்திக் கட்டணம் பெறக்கூடாது எனத் திண்ணைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலேய அரசு விதிவகுத்தது.

திண்ணைப்பள்ளி ஆசிரியர்களை உருவாக்கும் முயற்சியை 1931 ஆம் ஆண்டிற்குப்பின் அரசு குறைத்துக்கொண்டது.

கோவையில் திண்ணைக்கல்வி

திண்ணைப்பள்ளியில் படித்தோரின் கல்வித் திறன் பற்றிக் கோவை மாவட்ட ஆட்சியர் 1834இல் எழுதியுள்ள குறிப்பு இது.

பள்ளிக்கூடத்தில் ஐம்பது சதவீத மாணவர்கள்
மாத்திரமே படிக்கவும் எழுதவும்
தமிழ்க்கணக்கு வைக்கவும்
சாமர்த்தியம் அடைந்திருந்தனர்
(ஜில்லா சரித்திரம் - கோயம்புத்தூர், 1927. பக்கம் - 10)

இலண்டன் மிசன் பாதிரிமார்கள் 1831இல் ஆறு தொடக்கப் பள்ளிகளைக் கோவை மாவட்டத்தில் முதன்முதலாகத் தொடங்கினர். 1850இல் பதினான்கு பள்ளிகளைத் தொடங்கினர். (விரிவான செய்திக்கு 1831ஆம் ஆண்டு பள்ளி வரலாறு காண்க).

கோவை மாவட்ட ஆட்சியர் தாமசு முயற்சியால் 1852இல் உருவானபிராஞ்சு ஸ்கூல்தொடக்கப் பள்ளியாகத் தொடங்கி, கோவை அரசு கலைக்கல்லூரியாகப் பின்னர் வளர்ச்சி பெற்றது.
(விளக்கம் : 1852ஆம் ஆண்டு பள்ளிச் செய்தது.)

மக்களின் துணையோடு மட்டுமே வளர்ந்த அன்றைய பள்ளிகள், 1871ஆம் ஆண்டிற்குப் பின்பே அரசின் உதவியையும் வழிகாட்டுதலையும் பெறத்தொடங்கின.

அன்றைய கோவை மாவட்டத்தில் 841 திண்ணைப் பள்ளிகள் இருந்தன. அவற்றில் பன்னிரண்டு மட்டுமே அரசால் பள்ளிகளால் ஏற்கப்பட்டன.

ஆசிரியர்களுக்குப் பயிற்சிதரும் நிறுவனங்களைச் சேவூர், காங்கயம், சூலூர் முதலிய ஊர்களில் நிறுவிய ஆங்கிலேய அரசு பின்னர் அவற்றைக் கைவிட்டு விட்டது.

கோவையின் கல்விவேர்கள்

1927இல் கோவையில் இருந்த கல்வி நிறுவனங்கள் இவை :

1. உயர்நிலைப்பள்ளிகள் - மூன்று (சி.எஸ்., மைக்கேல், சர்வஜனபள்ளி)

2. மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இணைந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளி - ஒன்று (இராசவீதி மகளிர் பள்ளி).

3. ஆண்கள் ஆசிரியப் பயிற்சி நிறுவனம் - ஒன்று (இப்போது மகளிர் கல்வியியல் கல்லூரியாகிவிட்டது.)

4. இடைநிலைக்கல்லூரி - ஒன்று ( கோவை அரசுக் கலைக்கல்லூரியில் பட்ட வகுப்புகள் 1946 வரை வரவில்லை. (இண்டர் மீடியட. வகுப்புகள் மட்டுமே இருந்தன).

5. வேளாண்மைக் கல்லூரி - ஒன்று

6. வனவியல் கல்லூரி - ஒன்று.

இந்தக் கல்வி நிறுவனங்களே, கோவையின் பலமுனை வளர்ச்சிக்கு ஆணிவேராக அமைந்தவை. இவை கோவை மண்ணில் வேர் பிடிப்பதற்குக் காரணமான சமுதாய, வரலாற்றுச் சூழல் - வியப்பும் திகைப்பும் தருவது.

சங்ககாலமும் இடைக்காலமும்

பிறரிடம் கையேந்தி உதவி பெற்றாவது படிக்குமாறு, சங்ககாலத்தில் கல்வியின் தேவை வலியுறுத்தப்பட்டது.

சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் படிக்கின்ற சமவாய்ப்பும் சம உரிமையும் அப்போது இருந்தன. ஆணும் பெண்ணும் சமமாய்க் கல்வி பெறும் வாய்ப்பைச் சங்ககாலச் சமுதாயம் வழங்கியிருந்தது.

இடைக்காலத்தில் இந்நிலை மாற்றப்பட்டு விட்டது. தொழில் வழிப் பிரிவுகளாயிருந்தவை, பிறவி வழிச் சாதிகளாக்கப்பட்டன. நால்வரணப் பாகுபாடும் சாதிவழி ஏற்றத் தாழ்வும் உருவாக்கப்பட்டன. தீண்டாமை, அண்டாமை, பாராமை முதலிய சமூகக் கொடுமைகள் தலைதூக்கின. அரசின் சட்டமாகவும் அவை ஏற்கப்பட்டன.

உயர் சாதியினருக்கு மட்டுமே படிப்பு எனும்குருகுலக் கல்வி முறைதோற்றுவிக்கப்பட்டது. பன்னிரண்டு ஆண்டு படிக்கும் விரிவான குருகுலக் கல்வியில் உயர்சாதியினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

உழைக்கும் மக்களின் கல்வித் தாகத்தைத் தீர்க்கத் திண்ணைப்பள்ளிகள் தோன்றின. திண்ணைப்பள்ளிப் படிப்பு வெறும் இரண்டாண்டுகளே ! ஆங்கிலேயர் காலத்தில்தான் அது தொடக்கப் பள்ளியாக்கபப்ட்டு நான்காண்டானது. பின்பு ஐந்தாண்டாக விரிந்தது.

எண்ணும் எழுத்தும் அறிமுகமான நிலையில், சாதிவழித் தொழில்களை மட்டுமேகண்ணாகப் பேணுமாறு மக்கள் கட்டாயப் படுத்தப்பட்ட காலம் இருந்தது.

’பள்ளி’ வந்தது

அனைவருக்கும் படிப்பு வழங்கும் முயற்சியைப் புத்தமதமும் சமணமதமும் மேற்கொண்டன. சமணர்களின் பாடசாலைகள் இருந்த ஊர்களின் பெயரில்பள்ளிஎன்பது இருக்கும்.

பீடம்பள்ளி, பதுவம் பள்ளி, திருச்சிராப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி எனத் தொடரும் இன்றைய ஊர்கள் ஒருகாலத்தில் சமணப்பள்ளி இருந்த ஊர்கள் ! இன்றையபள்ளிக் கூடமும் அந்த வரலாற்றின் அடித்தளத்தில் முளைத்த சொல்லே ஆகும்.

தொடர்ந்து வந்த இசுலாமும் கிறித்தவமும் கல்வி விளக்கை அனைவரின் கைகளுக்கும் வழங்க எடுத்த முயற்சிகள், ஓர் எல்லையோடு நின்றுவிட்டன.

முறையான கல்வி

ஆங்கிலேயர் ஆட்சி உருவானபின் திண்ணைப்பள்ளிகள் முறைப்படுத்திவிட்டன. ‘அறிவரி வகுப்பு’ (அகரவரி) என ஒன்றும், அதையடுத்து நான்கு வகுப்புகளும் திண்ணைப் பள்ளி வகுப்புகளாயின. பின்னர் அவையே தொடக்கப்பள்ளிக் கல்வியாக வடிவம் பெற்றன. அறிவரி வகுப்புகூடசின்ன அறிவரி’ ‘பெரிய அறிவரிஎன (இன்றைய LKG, UKG போல) முதல்வகுப்பிற்கு முன்னர்இரட்டை வகுப்புகளாகக் கற்பிக்கப்பட்டன. அறிவரிவகுப்பு, மக்கள் நாவலில்அறிவிலி வகுப்புஎன மாறியதும் உண்டு.

முறையான பள்ளியமைப்பு உருவாகி, பாடத்திட்டங்களும் கல்வி அமைப்புகளும் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுக் கல்வித்துறை முறைப்படுத்தப்பட்டது.

இடைநிலைக்கல்வி (இண்டர் மீடியட்) பட்டக்கல்வி என வகைப்படுத்தப்பட்ட கல்லூரிக் கல்வி தொடர்ந்து அறிமுகமானது.

தமிழகம் தந்த சமூகநீதி

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என ஒழுங்கு படுத்தப்பட்ட கல்வியால் சமுதாயம் புதிய முகத்தைப் பெற்றது. உயர்ந்த மதிப்பெண் உள்ளவர்களுக்கு மட்டுமே உயர்கல்வியிலும் அரசுப்பணியிலும் இடம் கிடைக்கும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டபோது, பொது மக்களிடம் புதிய விழிப்பு தலைதூக்கியது.

தலைமுறை தலைமுறையாய்ப் படித்த சமூகத்தினர் அதிக மதிப்பெண் பெறுவது இயற்கை ! படிக்கும் வாய்ப்பு பல தலைமுறையாய் மறுக்கப்பட்டு, கல்வி வெளிச்சத்தைப் புதிதாய்க் கண்கூசிப் பார்க்கும் சமூகத்தின் அடித்தட்டு மாணவர்களிடம் அதே மதிப்பெண்ணை எப்படி எதிர்பார்க்க முடியும்?

சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்கும் படிப்பையும் பணிவாய்ப்பையும் அவரவர் எண்ணிக்கை விழுக்காட்டிற்கேற்ப வழங்கக்கோரும் சமூக நீதிக்குரலைத் தமிழகம் எழுப்பியது.

தாழ்த்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என ஒடுக்குமுறைப் பாதிப்பின் அளவிற்கேற்ப ஒடுக்கப்பட்டோருக்கு உரிய விகிதத்தை வழங்கும்வகுப்புவாரி இட ஒதுக்கீடுநடைமுறைக்கு வந்தது.

திராவிடர் இயக்கம் எழுப்பிய சமூக நீதிக் குரலின் நியாயத்தை எல்லா இயக்கங்களும் ஒப்புக் கொள்ளும் நிலை இயல்பாக உருவாகிவிட்டது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இன்று சமூகநீதிக் குரலின் வழிநடக்கும் சூழல் தோன்றிவிட்டது. நடுவணரசுத் துறைகளில் சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் பங்குபெறும் சட்ட பூர்வ நிலை இப்போதுதான் அரும்பியுள்ளது.

'எசமானேஎனக் கைகட்டி நின்ற உழைக்கும் மக்கள், இன்று அதிகார இருக்கையில் அமரும் வாய்ப்பையும் சமூகத்தகுதியையும் பெறுவதற்குக் காரணமானது கல்வியே !

திண்ணைப்பள்ளிக் கல்வி

கல்வியறிவு பெற்றதால், அரசுப் பதவிகளில் இடம் பெற்ற முதல் தலைமுறையினர், படிப்பின் சுவையைப் பார்த்தது திண்ணைப்பள்ளி வழியாகத்தான் !

அன்றைய திண்ணைப்பள்ளி நடைமுறைகள் இன்றைய தலைமுறையினர்க்கு நம்ப முடியாத செய்திகளாய்த் தோன்றும்.

திண்ணைப்பள்ளி என்பது ஆசிரியர் வீட்டுத் திண்ணையில்தான் நடக்கும். ‘எல்லோருக்கும் கல்விஎன்பது மறுக்கப்பட்ட இடைக்காலத்தில் கல்வி கற்பதற்குத் திண்ணைப் பள்ளியையே அடித்தட்டு மக்கள் நம்பியிருந்தனர்.

திண்ணை இருபிரிவாய் இருக்கும். கீழ் வகுப்புக் குழந்தைகள் ஒருபுறம். மேல் வகுப்புக் குழந்தைகள் மறுபுறம்.

பள்ளியில் ஏழு வயதில் சேர்ப்பதே அந்தநாள் வழக்கம் ! பின்னர் அது ஐந்து வயதாய்க் குறைக்கிறது.

அண்மைக் காலம் வரை, பள்ளியில் சேரும் குழந்தையிடம் வயது கேட்க மாட்டார்கள். கேட்டாலும், பெற்றோருக்குச் சொல்லத் தெரியாது.

தலைக்குப் பின்புறமாகக் கையை வைத்துக் காதையோ மூக்கையோ தொடுமாறு ஆசிரியர் சொல்வார். மாணவர் வயதை இப்படி அறிவதே நெடுநாள் வழக்கம். 1965ஆம் ஆண்டுவரை கூட, தமிழகப் பள்ளிகள் இந்த நடைமுறை வந்தது.

முறையான கல்வி கற்பிக்கும் பள்ளிகள் 1930க்கு முன்பு கோவையில் இல்லை. விருப்பமுள்ள்ள ஆசிரியர்கள், விரும்பிய ஊரில் வீடுபிடித்துத் தங்குவார்கள். வீட்டுத் திண்ணையைப் பள்ளியாக்கி விடுவார்கள்.

ஆண்,பெண் வேறுபாடின்றி அனைவரும் வண்ணநூல் வைத்துத் தலையில் சடைபின்னிப் பள்ளியில் அமர்ந்திருக்கும் காட்சி 1965 வரை பள்ளிகளில் இருந்தது.

தொடக்கக் காட்சி

திண்ணைப்பள்ளி வகுப்புகள் விடியற் காலையிலேயே தொடங்கிவிடும். பிரம்படிக்குப் பயந்து ஒவ்வொருவரும் வகுப்புக்கு முந்திவருவதில் போட்டி போடுவார்கள்.

பள்ளிக்கு முதலில் வரும் மாணவனுக்குவேத்தான்’ (வேற்றான் - தனிப் பெருமையுடையவன் )என்று பெயர். இந்தப் பெருமையைப் பெறுவதற்காக நள்ளிரவில் வந்துவிடும் மாணவர்களும் உண்டு.

இன்றைக்குவேத்தான்யாரு?” என ஆசிரியர் வினவும் போது, எழுந்து நிற்கும் மகிழ்ச்சியைப் பெறுவதற்காக மாணவர்களுக்குள் அன்றாடம் போட்டி நடக்கும்.

தனக்குப்பின் பள்ளிக்கு வரும் மாணவர் பெயர்களை வரிசைப்படி எழுதிவைக்க வேண்டியது, முதலில் வந்த மாணவனின் கடமை.

மாணவர்கள் வந்த தாமத வரிசைக்கேற்ப, ஆசிரியர் பிரம்படி வழங்குவார். அவரின் பிரம்பு, முதல் பையன் கையைத் தடவுவதோடு நின்றுவிடும். அடுத்து நிற்பவன் கையில் அடி மெல்ல விழும். அடுத்தடுத்து நிற்பவர்குக்கோ பிரம்படியின் வேகம் கூடிக்கொண்டே செல்லும்.

வகுப்பு தொடங்குவதற்கு அடையாளமாக மாணவர்கள் சேர்ந்து பாடும் பாடலும் உண்டு.

காலமே எழுந்தி ருந்து
கால்முகம் சுத்தி செய்து
கோலமாய் நீறு பூசிக்
குழந்தைகள் பசிகள் தீரப்
பாடமும் படித்தோம் அய்யா
பகர்அடி பட்டுக் கொண்டோம்
சீடரை அனுப்பும் அய்யா
திருவடி சரணம் தானே !”

மணலில் எழுத்து

காலை வணக்கப் பாடல் முடிந்ததும், ஆசிரியரின் பிரம்பைச் சட்டாம்பிள்ளை வெளியில் எடுத்து வந்து வைப்பான். வீட்டிலோ ஆற்றிலோ எடுத்துவந்த மணலை மாணவர்கள் தங்கள்முன் சமமாய்ப் பரப்புவார்கள். சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் மணலின் மீது ஒவ்வோர் எழுத்தையும்ஆனா, ஆவன்னாஎன இராகம் போட்டபடி சுட்டு விரலால் எழுதத் தொடங்குவார்கள். விரல் தேய்த்து சிலருக்கு இரத்தம் வந்துவிடும். இரத்தம் வராதிருக்க, கழற்சிக்காய் ஓட்டினை விரலில் செருகியபடி மணலில் எழுதும் வழக்கமும் இருந்தது.

கீழ்வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி நடக்கும்பொழுது, மேல்வகுப்பு மாணவர்கள் ஏட்டுச் சுவடியைப் பிரித்து வைத்து இராகம் போட்டுப் படிக்கத் தொடங்குகிறார்கள்.

மணலில் எழுதிப் பழகியமுறை, கைப்பலகை (சிலேட்டு) வந்ததும் மறைந்துவிட்டது. காகிதப் புத்தகம், தூவல் (பேனா) அறிமுகமாகும் வரை ஓலைச்சுவடியும் எழுத்தாணியுமே இங்கு எழுது பொருள்களாய் இருந்தன.

சுவடித்தூக்கும் - தூக்குத் தூக்கியும்

எழுத்துப் பயிற்சி வந்த மாணவர்களுக்கு கீழ்வாய் இலக்கம், மேல்வாய் இலக்கம், நெல் இலக்கம், குழிமாற்று முதலிய கணக்குவகை கற்பிக்கப்படும் நிகண்டு, நெடுங்கணக்கு, நிதி நூல்கள், அந்தாதிகள், கலம்பங்கள், சதகங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள் முதலியவற்றையும் ஆசிரியர் கற்பிப்பார்.

வீட்டிலிருந்து கிளம்பும் மாணவர்கள் சுவடித்தூக்குடன் புறப்படுவார்கள். சுவடிகளை அடுக்கி வைத்துத் தூக்கிச் செல்லும் கயிறு சேர்ந்த பலகையின் பெயர்சுவடித் தூக்கு’.

வசதியான வீட்டுப்பிள்ளைகள், சுவடித் தூக்கைச் சுமப்பதற்கு வேலையாள் வைத்திருப்பர். அவருக்குப் பெயர்தூக்குத் தூக்கி’. இந்தப் பெயரில் வந்த திரைப்படம் கூட உண்டு.

சுவடித் தூக்குஒருவகை உறிபோல இருக்கும். திண்ணைப்பள்ளி ஆணியில் வரிசையாய் மாணவர்கள் மாட்டி வைத்திருப்பார்கள்.

சுவடிக்காலச் சுவடுகள்

அரிச்சுவடி, எண்சுவடி முதலிய பெயர்கள் அந்தக்கால ஓலைச்சுவடி முறையை இன்றும் நினைவூட்டுபவை.

திண்ணைப் பள்ளிக் கல்வியில் முக்கியமான ஒன்று, ஓலைச் சுவடிகளைப் பராமரிக்கக் கற்றுக் கொள்வது !

பனை ஓலைகளைக் கத்தரிக்கவும் சுவடி சேர்க்கவும், எழுதத் தாணியால் அவற்றில் எழுதவும் கற்றுத் தருவார் ஆசிரியர்.

சுவடியைப் பிரிப்பதற்கும் சேர்த்துக் கட்டுவதற்கும் மிகுந்த பயிற்சி வேண்டும்.

ஓலையை நறுக்கிச் சீராய்த் துவாரம் அமைத்து, அதில் நூற்கயிற்றைச் செருகிக் கட்ட வேண்டும். நூல் உருவிவராமல் இருப்பதற்கு அடிப்பகுதியில் ஓலைச்சுருளோ பொத்தானோ ஓட்டைக் காலணாவோ சோளியோ வைத்துக்கிளி மூக்குகட்ட வேண்டும்.

ஏடுகளின் தொடக்கத்திலும் இறுதியிலும் வெற்றேடுகள் சிலவும் (எழுதப்படாமல்) இணைக்க வேண்டும்.

ஆசிரியர் கையெழுத்தில் அமைந்த மூல ஓலையின் பெயர்சட்டம்’. அந்த ஓலையில் உள்ளது போன்றே மாணவர்கள் எழுதி எழுதிப் பழகுவார்கள்.

எழுத.... எழுத....

எழுத உதவும் எழுத்தாணியிலும் பலவகை இருந்தது. வார் எழுத்தாணி, மடக்கு எழுத்தாணி, குண்டு எழுத்தாணி என வசதிக்கேற்ப வைத்திருப்பார்கள்.

பனையோலையால் உறை செய்து மூடி போட்டிருப்பது வார் எழுத்தாணி.

மடக்கிக் கொள்ளும் வசதியுடன் இருப்பது மடக்கு எழுத்தாணி.

எழுத்தாணிக்குப் பின் காகிதம் வந்தபோது அறிமுகமானதுதொட்டு இங்கு பேனா’. ‘கட்டைப் பேனாஎன்ற பெயரும் இதற்கு உண்டு. கட்டை (பீடர்) இல்லாமல் வெறும் முள் (நிப்) மட்டும் நீண்ட குச்சியில் செருகப்பட்டிருக்கும். மையில் முள்ளைத் தொட்டுத் தொட்டு எழுத வேண்டும். இதனை வாங்க வசதியில்லாதவர்கள் கரிக்கோல் (பென்சில்) கொண்டு தேர்வு எழுதுவதே 1968ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.

தொட்டிங்கு பேனாவால் எழுதுவோர் மைப்புட்டி (இங்க் பாட்டில்) ஏந்தியபடி வகுப்பிற்கு வருவர்.

மைப்புட்டி வைப்பதற்கான சிறுவட்டத்தையும், எழுதுகோலுக்கான நீண்ட பள்ளத்தையும் பழைய பள்ளிகளின் மரப்பலகைகளில் இன்றும் காணலாம்.

எழுத்தாணிகால அசுர முயற்சியான எழுத்துப் பயிற்சி, ஊற்றுத் தூவல் (fountain pen) வந்தபின் வெண்ணையைத் தொட்டு நாவில் வைப்பது போன்ற எளிய செயலாகிவிட்டது.

சுவடியில் படித்த பாடல்களை மறுநாள் ஒப்பித்துக் காட்ட வேண்டும். திண்ணைப்பள்ளியில் இதனைமுறை சொல்லுதல்என்பார்கள்.

முறைசொல்லுதல் முடிஞ்சதும் வந்து சொல்லுஎன மனப்பாடப் பாடல் கேட்கும் பணியை ஆசிரியர், சட்டாம் பிள்ளையிடம் ஒப்படைத்து விடுவார். வகுப்புத் தலைவனுக்கு அன்றைய பெயர் சட்டாம் பிள்ளை. வகுப்பில் பெரியவனாகவும் இருப்பவனுக்கு இப்பகுதி வந்து சேரும்.

நாவுக்கும் உண்டு !

புதிதாக மாணவர்கள் பள்ளியில் சேர்வதைச்சுவடி தொடங்கல்என்பார்கள்.

மாணவன் பெயரைப் பனையோலையில் எழுதி, மஞ்சள் தடவிக் கடவுளை வழிபட்டு ஆசிரியர் கற்பிக்கத் தொடங்குவார். அப்போது மாணவரின் பெற்றோர், பள்ளியிலுள்ள அனைவருக்கும் காப்பரிசி தரவேண்டும்.

பச்சரிசியுடன் எள்ளும் வெல்லமும் தேங்காய்ப்பாலும் கலந்து செய்த காப்பரிசி, எல்லா மாணவர்களுக்கும் வழங்கப்படும்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டில் விளையும் காயோ பழமோ உப்பு புளி மிளகாயோ ஏதேனும் ஒருபொருளை அன்றாடம் ஆசிரியர் வீட்டிற்குச் சுமந்து வருவார்கள்.

மதியவுணவுக்கும் மாலை நேரத்திற்கும் இடையே சிலமாணவர்கள் சிற்றுண்டிக்காக வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்பர். ‘இளம்பால் சாப்பாடுஎன்று இதற்குப் பெயர். சாப்பிட்டுத் திரும்பும் மாணவர்கள் வீட்டிலிருந்துபடிவிறகுஎடுத்து வரவேண்டும்.

வாவும் வரவும்

அமாவாசை, பவுர்ணமி நாள்களில் திண்ணைப்பள்ளி செயல்படாது. அதற்குவாவு நாள்கள்என்று பெயர். அமாவாசையைக்கார் உவாஎன்பதும் பவுர்ணமியைவெள்ளுவாஎன்பதும் இலக்கிய மரபு. ‘உவாஎன்பது இடம்மாறிவாவு’ (விடுமுறை) ஆகிவிட்டது.

விடுமுறை முடிந்து வரும் மாணவர்கள் ஆசிரியர்க்குவாவுக்காசுதரவேண்டும்.

சனிக்கிழமை தோறும் மாணவர்கள் எண்ணெய், சீயக்காய், அரப்பு, பிண்ணாக்கு கொண்டுவந்து தருவார். அறுவடையில் ஒரு பகுதி ஆசிரியர் வீட்டிற்கு வந்து சேரும்.

மாணவர் தரும் உதவியில் தான், ஆசிரியர் குடும்பம் நடத்த வேண்டும்.

உவா நாளுக்கு முதல்நாள், திண்ணைப் பள்ளி முழுவதையும் சாணமும் நீரும் கொண்டு மாணவர்கள் மெழுகிவிடுவார்கள்.

ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகர்நோன்பு (நவராத்திரி) காலத்தில் மாணவர்கள் ஊரிலுள்ள வீடுதோறும் சென்று கோலாட்டம், கும்மியாட்டம் எனத் தாம் கற்ற கலைகளை நிகழ்த்திக் காட்டுவர். மாணவர்களுக்குச் சுண்டலும், ஆசிரியர்களுக்கு அன்பளிப்பும் அப்போது கிடைக்கும்.

வகுப்பில் கேட்கும் செய்தி ஒவ்வொன்றையும் மாணவர்கள் ஓலைச்சுவடியில் எழுதிவிட வேண்டும். அப்போதுதான் நினைவுபடுத்திக் கொள்ளவும், பிறருக்கு எடுத்துச் சொல்லவும் முடியும்.

சுவடிப்பராமரிப்பு

ஓலைச்சுவடி எழுதுவதும் கடினம்; படிப்பதும் கடினம்; பராமரிப்பது மிகவும் கடினம். சுவடி எழுத்து, படிப்பதற்கு ஏற்ற வகையில் தெரிய வேண்டும். பூச்சி அரிக்காமல் ஓலையைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு ஓலையாய் எடுத்து அடிக்கடி அடிக்கடி பூச்சு பூச வேண்டும்.

மஞ்சள், வசம்பு, கரி, ஊமத்தைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட பூச்சை ஓலையில் பூசுவது முக்கியம்.

கைப்பலகை (சிலேட்டு) வந்த பிறகு அதற்கும் ஒரு பூச்சு உண்டு. கரித்தூள், கோவைஇலை கலந்து அரைத்த கலவையை எழுது பலகையில் தடவி வெயிலில் காயவிட்டுக் கைப்பலகைக்கு மாணவர்கள் கருப்பு நிறமேற்றுவார்கள்.

கருப்புக்கலவை ஊறிய எழுதுபலகையைக் குழந்தைபோல் ஏந்திச் சென்று கழுவி வருவார்கள். மாணவர்களுக்குள் சண்டைவரும்போது, கைப்பலகையே போர்க்கருவியாவதும் நடக்கும். எழுதுபலகை உடைந்துபோய், வெறும் மரச்சட்டத்தை மட்டும் கையிலோ கழுத்திலோ மாட்டிக்கொண்டு, பெற்றோரும் ஆசிரியரும் தரும் பிரம்படிக்குத் தயாராய்ச் செல்லும் மாணவ வீரர்கள் உண்டு.

அந்தக்காலத் தண்டனைகள் !

அந்தக் காலப் பள்ளியில் பிரம்படி என்பது பொதுவான ஒரு செயல், எளிமையான தண்டனை.

குலைநடுக்கம் தரும் தண்டனை முறைகளும் முன்பு இருந்தன.

பள்ளிக்கு வராத மாணவனை அழைக்கச் சட்டாம்பிள்ளை மாணவர் படையோடு புறப்படுவான். ஓடிஒளியும் மாணவனைத் தேடிப் பிடித்துப் பள்ளிக்கு இழுத்து வருவார்கள். “கண்ணை மட்டும் வச்சுட்டு தோலை உறியுங்கஎனப் பெற்றோரும் மாணவனுக்கு தண்டனை வழங்க வழிமொழிவார்கள்.

பள்ளிக்கு வராமலா ஓடறே ! இப்ப ஓடு பாப்போம் !” எனச் சொல்லியபடி மாணவனுக்குத் தரப்படும் தண்டனைமுட்டிசுமத்தல்’.

காலில் வளையம் பூட்டப்பட்டு, வளையத்தோடு இணைந்த சங்கிலியின் முனையில் மரத்தாலான பெரிய முட்டி இருக்கும். முட்டியைத் தோளில் சுமந்தபடிச் சங்கிலி பூட்டிய காலுடன் மாணவன் வீட்டுக்கும் பள்ளிக்குமாகத் தள்ளாடி நடந்து கொண்டிருப்பான். இரவு பகல் எந்நேரமும் வளையமும் முட்டியும் மாணவனைப் பிரியாமல் இருக்கும்.

தண்டனைக்குப் பயந்தாவது படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் கோசாணம், கோதண்டம் என வகைவகையான தண்டனைகள் முன்பு இருந்தன.

தவறு செய்த மாணவனைக் கயிற்றில் கட்டி, விட்டத்தில் தொங்க விடுவார்கள். கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் தொங்கும் போது, கீழே நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். சுவாலையின் சூடுதாங்காமல் மாணவன் அலறல் அதிகமானால், நெருப்பை அணைத்து விட்டு நீண்ட ஊசியைக் கீழே நிறுத்தி வைப்பார்கள். இந்தத் தண்டனைதான் கோசாணம்.

விட்டத்தில் தொங்கும் மாணவனின் காலில் பிரம்பால் அடிப்பது கோதண்டம்.

பாடம் சொல்லாதவன் முதுகில் அமர்ந்தபடி, பாடம் ஒப்பித்தவன் குதிரை சவாரி செய்வது போல் அமர்ந்து பள்ளி வலம் வருவதும் அன்றாடத் தண்டனைகளில் ஒன்று.

தண்டனை கொடுப்பதே படிப்பதற்குத் தான் ! தண்டனைக்குப் பயந்தே படிப்பை விட்டவர்களும் இருந்தார்கள்.

பாடம் முடிந்தது

வகுப்பு முடிந்து பள்ளியை விட்டு புறப்படும்போது, ஆசிரியர் அருகில் மாணவர்கள் ஒவ்வொருவராகச் செல்ல வேண்டும்.

பூ, விலங்கு, பறவை, ஊர் இவற்றில் ஒவ்வொன்றை ஒவ்வொரு மாணவரிடமும் ஆசிரியர் மாற்றி மாற்றிக் கூறுவார். மறுநாள் அதே பெயர்களை அதே வரிசையில் அதே மாணவன் ஆசிரியரிடம் அப்படியே சொல்லியாக வேண்டும்.


மறந்து விடுவோமாஎன்ற அச்சத்தால் வீட்டிற்குச் சென்றவுடன் பெற்றோரிடம் சொல்லி மனப்பாடமாக்கிவிடுவார்கள். மறுநாள் பெற்றோரிடம் கேட்டு நினைவுபடுத்திக் கொண்டு வருவது பல மாணவர்களின் வழக்கம்.

பள்ளி தொடங்கியபோது பாடியது போலவே, பள்ளி முடியும் போதும் பாட்டு உண்டு. வீட்டிற்குச் செல்லும் மகிழ்ச்சியுடன் வேகவேகமாய் மாணவர்கள் உரத்தகுரலில் சேர்ந்து பாடுவார்கள்.

"அந்திக்குப் போறோம் நாங்கள்
அகந்தனில் விளையா டாமல்
சுந்தர விளக்கின் முன்னே
சுவடிகள் அவிழ்த்துப் பார்த்து
வந்தது வராத தெல்லாம்
வணவுடன் படித்துக் காட்டி
கந்தனார் கோழி கூவ
காலமே வாரோம் அய்யா!”

திண்ணைப் பள்ளிகளில் இப்படியொரு தேசியகீதம் அன்றாடம் ஒலித்த காலம் 1950க்குப் பின் ஓய்ந்து போனது.

கோவை மாவட்டம் உருவானது !

கோவை மாவட்டம் 1799ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. தாராபுரம், பவானி என இரு தலைநகரங்களுடன் இரண்டு பகுதியாக இயங்கி வந்தது அன்றைய கோவை மாவட்டம்.

கோவை நகரைத் தலைநகரமாகக் கொண்டு 24.11.1804 ஆம் நாள், ஒன்றுபட்ட கோவை மாவட்டம் உருவானது.

மேஜர் டபிள்யு. மெக்லியாடு எனும் ஆங்கிலேயர், கோவை மாவட்டத்தின் முதல் ஆட்சியராக, 06.07.1799 ஆம் நாள் பதவி ஏற்றார்.

கோவை மாவட்டத்தில் முன்பு பத்து வட்டங்கள் (தாலுகா) இருந்தன.

. கோவை
. பல்லடம்
. பொள்ளாச்சி
. உடுமலை
. தாராபுரம்
. ஈரோடு
. கரூர்
. சத்தியமங்கலம்
. பவானி
௧0. கொள்ளேகாலம்

பவானி வட்டம் 1929இல் சேலம் மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது. கரூர் வட்டம் திருச்சி மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டு, இப்போது தனி மாவட்டம் ஆகிவிட்டது.

கொள்ளேகால் வட்டம், கோவை மாவட்டத்தில் இருந்த செய்தியே இன்று தெரியாத செய்தியாகிவிட்டது. இன்று அது கருநாடகப் பகுதி !

ஈரோடு, சத்தியமங்கலம், தாராபுரம் வட்டங்கள் 1979இல் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரியார் மாவட்டம் எனத் தனிமாவட்டமானது. பெரியார் மாவட்டம் எனத் தனிமாவட்டமானது. பெரியார் பிறந்த ஊர் ஈரோடு. தனி ஒருவர் பெயரில் உருவான முதல் மாவட்டம் இது தான் ! புதுப் புதுத் தலைவர்கள் பெயரில் அடுத்தடுத்து மாவட்டங்கள் பெருகிடும் ஆபத்து தலைதூக்கியபோது தலைவர்கள் பெயர் தாங்கிய மாவட்டங்கள் அனைத்தும் ஊர்ப் பெயரோடு சுருக்கப்பட்டன. பெரியார் மாவட்டம் இப்போது ஈரோடு மாவட்டம் ஆகிவிட்டது.

இன்றைய கோவை மாவட்டத்தில் ஒன்பது வட்டங்கள் (தாலுகா) உள்ளன.

. கோவை (வடக்கு)
. கோவை (தெற்கு)
. பல்லடம்
. திருப்பூர்
. மேட்டுப்பாளையம்
. அவிநாசி
. உடுமலை
. பொள்ளாச்சி
. வால்பாறை

கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் தனிமாவட்டமாக விரைவில் பிரிக்கப்படவுள்ளது.

முறையான கல்வியும் பள்ளியும்

பள்ளிக்கூடம், பாடத்திட்டம், ஆசிரியர்கள் என்னும் முறையான கல்வி முறை 1837க்குப் பின்பே தமிழ்நாட்டிற்கு அறிமுகமானது.

பொதுக்கல்வி முறையை உருவாக்குவதற்கான அரசு முறையிலான ஏற்பாடு 1829இல் தொடங்கியது.

கோவை நகருக்குப் பள்ளிக் கல்வி 1831ஆம் ஆண்டு அறிமுகமானது. அன்றைய கோவை மாவட்ட ஆட்சியர் சல்லிவன், ஆடிசு பாதிரியார் இருவர் முயற்சியில் உருவான வெர்னாகுலர் பள்ளியே கோவையின் முதல்பள்ளி.

முதன் முதலாக 1867ஆம் ஆண்டு இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி) எழுதும் வாய்ப்பைக் கோவை மாணவர்கள் பெற்றனர்.

தமிழ்நாட்டிற்குக் கல்லூரிக் கல்வி அறிமுகமானதும் அதே 1867ஆம் ஆண்டில்தான்.

சென்னைப் பல்கலைக் கழகப் பள்ளிஎன 1841இல் தோன்றி, பட்டம் வழங்கும் பணியையும் செய்து வந்த நிறுவனம், 18547இல் சென்னைப் பல்கலைக் கழகம் என்னும் பெயருடன் செயல்படத் தொடங்கியது.

பொதுக்கல்வி இயக்கிநரகம் 1884இல் உருவாக்கப்பட்டது. சென்னை மாநிலக் கல்விச்சட்டம் 1892ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. உயர்நிலைக் கல்விக்கான தனிவாரியம் 1910ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

பள்ளிக் கல்வியை ஒழுங்கப்படுத்தும் வாய்ப்பாக 30.09.1921ஆம் நாள் கோவை மாவட்டக் கழகம் (ஜில்லா போர்டு) உருவானது.

கோவை, பல்லடம், பொள்ளாச்சி, கொள்ளேகாலம், கோபி, ஈரோடு எனும் ஆறு வட்டக்கழகங்கள் (தாலூகா போர்டுகள்) கோவை மாவட்டக் கழகத்தில் அடங்கியிருந்தன.

கோவை மாவட்டத்தில் 1936ஆம் ஆண்டில் இருந்த தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 1742.

பொதுப்பள்ளிகள் 1015
மிசன் பள்ளிகள் 268
உதவிபெறும் பள்ளிகள் 427
பிற பள்ளிகள் 32

அன்றைய கோவையில் 4632 ஊர்கள் இருந்தன. ஊர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகள் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சி தொடர்ந்து நடந்தது.

அதே 1936இல் கோவை மாவட்டத்தில் இருந்த ஜில்லா போர்டு (இன்றைய அரசு) உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் ஏழுதான் !

அன்றைய உயர்நிலைப் பள்ளி வகுப்புகள், 5ஆம் வகுப்பிலிருந்து தொடங்கின. இன்றைய 6ஆம் வகுப்புக்கு முதல்படிவம் (பாரம்) என்பதே முன்பிருந்த பெயர். 11ஆம் வகுப்புக்கு 6ஆம் படிவம் என்ற பெயர் 1960ஆம் ஆண்டுவரை இருந்தது.

ஆசிரியர்கள் தலையில் தலைப்பாகை அணிந்தே அந்த நாளில் பள்ளி வருவார்கள். நீளமான குப்பாயம் (கோட்) அணிந்து, வேட்டி அணிந்திருப்பார்கள். தொப்பியும் முழுக்கால் சட்டையும் அணிந்த ஆசிரியர்கள் அரிதாகவே தென்படுவார்கள்.

தலை நிமிர்ந்து தாழ்த்தப்பட்டபோர்

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிப்பள்ளி வழங்கும் சலுகையை 01.12.1893இல் அரசு அறிவித்தது. பொதுப்பள்ளிகளில் அவர்கள் நடத்தப்பட்ட விதமோ மிகக் கொடுமையானது.

உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல முடியும்; வகுப்புக்குள் செல்ல முடியாது. வகுப்புக்கு வெளியே தலையைச் சுவரில் முட்டவைத்து நின்றபடிதான் தாழ்த்தப்பட மாணவர்கள் அந்த நாளில் பொதுப் பள்ளிகளில் படிதாக வேண்டும். நீதிக்கட்சி எடுத்த முயற்சியால் 1942ஆம் ஆண்டு இந்த அவலநிலை அகற்றப்பட்டது.

தாழ்த்தப்பட்டவர்கள் படிக்கக்கூடாது; சொந்தநிலம் வைத்திருக்கக் கூடாது; மாடிவீடு கட்டக் கூடாது; மண்பானையைத் தவிர வேறு உலோகப் பாத்திரங்கள் வைத்திருக்கக் கூடாது; சட்டையோ செருப்போ துண்டோ அணிந்து தெருக்களில் நடக்கக்கூடாது. இப்படி ஏராளமான ஒடுக்குமுறைகள் கோலோக்சிய காலம் இருந்தது. அந்த வரலாறு இன்றைய தலைமுறைக்குத் தெரிந்தாக வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தைக் கோவில் ஏற்படுத்தியவர்கள், தனிப்பள்ளி ஏற்படுத்த 1893வரை எந்த ஊரிலும் முயலவில்லை. ‘கட்டாயக் கல்விச் சட்டம்’ 1920ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. ஆறுவயது முதல் பதினான்கு வயது வரை உள்ள குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பியாக வேண்டும்; அனுப்பாத பெற்றோருக்குத் தண்டனை உண்டு. இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் இப்படியொரு சட்டம் வந்தது, அந்த ஒரே முறைதான் !

எல்லாச் சாதி மாணவர்களும் வகுப்பறைக்கு உள்ளே சென்று அமரும் சூழலை 1924ஆம் ஆண்டு, நீதிக்கட்சி ஆட்சி உருவாக்கியது.

கோவையில் இருந்த இதே நிலைதான், தமிழகம் முழுவதும் இருந்தது.

வழிகாட்டிய கோவை

தமிழகத்திற்கே வழிகாட்டும் கல்வி முயற்சிகள் பலவும் கோவையில் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழி வாயிலாகப் பாடம் பயிற்றுவிக்கும் முயற்சியை முதன்முதலாகக் கோவை நகரமே தொடங்கி வைத்தது.

அந்த நாளில் எட்டாம் வகுப்புக்குமேல் அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க முடியும். ஆங்கிலேயர் ஆட்சி, தமக்கான ஊழியர்களை உருவாக்க இப்படியோர் ஏற்பாட்டைச் செய்து வைத்திருந்தது.

ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலேயே ஆங்கிலப் பயிற்றுமொழி உயர்நிலைப் பள்ளிகளில் முழுதாய் அகற்றப்பட்டுவிட்டது.

அறிவியல் பாடத்தைத் தமிழ் வாயிலாக 1929ஆம் ஆண்டில் முதன்முதல் நடத்தி வழிகாட்டியது கோவை சர்வஜன உயர்நிலைப்பள்ளி. ‘தமிழ் நாட்டிற்கே வழிகாட்டுகிறது கோவை’ என அன்னிபெசண்டு அம்மையார் தமது ‘நியூ இந்தியா’ இதழில் இதனைப் பாராட்டி எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும், பதினொன்றாம் வகுப்புவரை தமிழில் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும் எனச் சென்னை மாநில அரசு நிறைவேற்றிய ஆணை 1939ஆம் ஆண்டில் நடிமுறைக்கு வந்தது. இப்படியோர் ஆணை பிறப்பிக்கப்பட வழிகாட்டியது கோவை நகரப்பள்ளி !

இலவசக்கல்வி !

கட்டணம் கட்டிப் பள்ளிக்கல்வி பயிலும் நிலையே முன்பு இருந்த்து. வசதியுள்ளோர்க்கு மட்டும் கல்வி வழங்கும் நிலைதான், இந்தியா விடுதலை பெற்ற பிறகும் தொடர்ந்தது.

மாதந்தோறும் கட்டணம் கட்டினால் தான், பள்ளிகளில் முன்பு படிக்க முடியும்.

எல்லோருக்கும் பள்ளிகளில் இலவசக்கல்வி கிடைக்கும் அரியவாய்ப்பு 1964ஆம் ஆண்டில் மலர்ந்தது.

தமிழகக் கல்வித் திறமும், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வும், அதன்பின் ஒவ்வொரு துறையிலும் தனிவளர்ச்சி பெற்றுத் தழைக்கத் தொடங்கின.

1 கருத்து:

  1. தகவல்கள் அனைத்தும் அறிந்துகொள்ள வேண்டியவை அதை ஆய்ந்து கொடுத்த உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன் தமிழ் வழி கல்வியின் சிறப்பு எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்ற உங்களின் பங்களிப்பிற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு